ராணிப்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் ராட்சத ஆசிட் டேங்க் வெடித்துச் சிதறி விபத்து

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத ஆசிட் டேங்க் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. டேங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த அலுமினியம் குளோரைடு என்ற ஆசிட் தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவியது. இதனால் வெளியேறிய நச்சுப் புகையால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாச பிரச்சினையால் அவதிக்கு உள்ளாகினர்.  ராணிப்பேட்டை அருகே தொழிற்சாலையில் இருந்த 50 ஆயிரம் லிட்டர் ஆசிட் டேங்க் வெடித்து சிதறியதில், நச்சுப்புகை பரவி வருவதால் தீயணைப்புத் துறையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த முசிறி பகுதியில் சன் பிக்ஸ் என்ற ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வகையான ரசாயனங்கள் தயாரிக்கப்படும் நிலையில், அவற்றை தேக்கி வைக்க 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தோல் தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில், கழிவு நீரை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் பாலி அலுமினியம் குளோரைடு ரசாயனம், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத டேங்க் ஒன்றில் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை அழுத்தம் காரணமாக திடீரென அந்த டேங்க் வெடித்து சிதறியது. இதில் தொழிற்சாலை முழுவதும் பரவிய ரசாயனம், சாலையிலும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் உருவான நச்சுப்புகை அப்பகுதி முழுவதும் பரவியதால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. வெடித்து சிதறிய டேங்கில் இருந்த ரசாயனம், நச்சுக் குறைவானது என்பதால் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 7 தொழிலாளர்கள், கண் எரிச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட சிறு பாதிப்புகளோடு உயிர்தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 10 பேர் அடங்கிய ராணிப்பேட்டை தீயணைப்பு குழுவினர் சுவாச கருவிகளை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்தும், எம் சாண்டை கொட்டியும் ரசாயனத்தின் வீரியம் மற்றும் வெளியாகும் புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து நடந்த தொழிற்சாலையின் அருகே குடியிருப்புகள் எதுவும் இல்லாததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் அருகில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷர்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. விபத்து நடந்த தொழிற்சாலையை மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு