இளவேனில் வாலறிவன்தான் எனது ரோல் மாடல் – வளர்ந்துவரும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரம்யா மகாலட்சுமி!

கோவை மாவட்டம், வழுக்குப்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தம்பதியரின் மகளான ரம்யா மகாலட்சுமி விளையாட்டுத் துறையில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பல்வேறு சாதனைகளை செய்துவருகிறார். இவர் துப்பாக்கி சுடுதலில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சான்றிதழ்களை குவித்துவருகிறார். இவரது தங்கையும் இவரைப் போலவே துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றுவருகிறார். ரைபிள் பிரிவில் பல போட்டியில், தேசிய, மாவட்டம், மாநில அளவில் பங்கேற்று பல்வேறு சான்றிதழ்கள் பெற்றதோடு பல சாதனைகளையும் செய்துவரும் ரம்யா மகாலட்சுமி துப்பாக்கி சுடுதல் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து…

உங்களுக்கு
விளையாட்டு மீதான ஆர்வம்
எப்படி வந்தது?

எனக்கு சிறுவயது முதலே விளையாட்டுத் துறை மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. நான் பள்ளியில் படிக்கும்போதே கோ-கோ, த்ரோபால், ரன்னிங், காராத்தே போன்ற விளையாட்டுப் போட்டிகளில் பல சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பெற்றேன். திருமலையம்பாளையம் நேரு கலை, அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படிக்கும்போது நேரு ஏர் ரைபிள் அகாடமி கிளப் மூலம் 2019ம் ஆண்டு ஏர் ரைபிள் பிரிவில் பயிற்சி பெறும் வாய்ப்பு அமைந்தது. அப்போது தான் எனக்கு துப்பாக்கி சுடுவதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.

துப்பாக்கி சுடுதல் குறித்து …

எனக்கு இத்துறையின் ரோல் மாடல் என்றால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூர் வீராங்கனை இளவேனில் வாலறிவன் தான். எனக்கு துப்பாக்கி சுடுதலில் ஏற்பட்ட அதீத ஆர்வத்தின் காரணமாக தொடர்ந்து 2 ஆண்டுகள் 2019 முதல் 2021ம் ஆண்டு வரை துப்பாக்கி சுடுதல் பிரிவில் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். பொதுவாக துப்பாக்கி சுடுதல் பிரிவில் ரைபிள் பிரிவில் முதல் கட்டமாக பயிற்சி பெறுவர். பின்னர் ஆர்வம் மற்றும் விருப்பத்தை பொறுத்து பிஸ்டல், பீப் சைட் பிரிவில் பயிற்சி பெற்று, போட்டிகளில் பங்கேற்பர். இந்த பிரிவிலும் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என 3 வகை போட்டிகள் உள்ளன. அதன்படி துப்பாக்கி சுடுதலில் முதற்கட்டமாக ரைபிள் பிரிவில் பயிற்சி பெற்று பிஸ்டல் பிரிவை தேர்வுசெய்தேன்.

எந்தெந்த போட்டிகளில்
பங்கேற்றுள்ளீர்கள்?

பாண்டிச்சேரியில் சூட்டிங் அசோசியேஷன் சார்பில் 2019 ல் நடைபெற்ற போட்டிகளில் ஓபன் சைட் ரைபிள் பிரிவில் பாராட்டுச் சான்றிதழ் பெற்றேன். நாமக்கல் சூட்டிங் அகாடமி சார்பில் 2021 ம் ஆண்டு முதலாமாண்டு சூட்டிங் மற்றும் ஓபன் சூட்டிங் போட்டி பிரிவில் 400 க்கு 261 புள்ளிகள் பெற்று 6வது இடம் பிடித்தேன். தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் சார்பில் 2019ம் ஆண்டு 45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 12வது இடத்தை பிடித்தேன். பாண்டிச்சேரியில் ஓபன் சூட்டிங் சாம்பியன்ஷிப் 2021 ல் 6வது இடம் பிடித்தேன். தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் பிஸ்டல் பிரிவில் மத்திய பிரதேசம் போபாலில் 2022ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டேன். மாநில அளவில் திருச்சியில் 2022 ல் 47-வது துப்பாக்கி சுடுதல் ஷூட்டிங் போட்டியில் கலந்துகொண்டேன். தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் சார்பில் 2023 ஜூலை 11ம் தேதி முதல் 23ம் தேதி வரை மதுரையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் 25வது இடம் பிடித்தேன். 66வது நேஷனல் சூட்டிங் சாம்பியன்ஷிப் காம்படிசன் 2023-2024,போப்பால்,மத்திய பிரதேசத்தில் யுத் உமன் பிரிவில் கலந்து கொண்டு 537 /600 புள்ளிகள் பெற்றுள்ளேன். இன்டர் யுனிவர்சிட்டி சூட்டிங் காம்படிசன் 2023-2024 ,ஹரியானா மாநிலத்தில், குருசேஷ்த்ர யுனிவர்சிட்டியில் ஏர் பிஸ்டல் உமன் பிரிவில் கலந்துகொண்டு 351/400புள்ளிகளை பெற்றுள்ளேன். தற்போது உலகளாவிய போட்டிகளில் கலந்துகொள்ள போதுமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதற்கான ட்ரையல் போட்டிகளில் தகுதியும் பெற்றுள்ளேன்.

இத்துறையில்
உள்ள சவால்கள்
என்னென்ன?

சர்வதேச, தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதிக்க நிறைய பயிற்சிகள் தேவைப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு முறையும் போட்டிக்கு செல்வதற்கு முன்னதாக கிளப்பிற்கு சென்று தீவிர பயிற்சி எடுக்க வேண்டும். அப்போது பிறர் பயன்படுத்திய துப்பாக்கியை பயன்படுத்துவதால் விளையாட ஏதுவாயில்லை. ஏழை விவசாயக் குடும்பம் என்பதால் என்னால் பயிற்சிக்கான கட்டணம் செலுத்த போதுமான வசதிகள் இல்லை. எனக்கு சொந்தமாக ஸ்டேயர் கம்பெனி வகை துப்பாக்கி தேவைப்படுகிறது, இதற்கு 2 லட்சம் வரை செலவாகும். சர்வதேச, தேசிய அளவில் துப்பாக்கி சுடும் பிரிவில் சாதனை படைக்க எனக்கு ஸ்பான்ஸர்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். எனது பெற்றோர்களும் , எனது குடும்பமும் என்னை இத்துறையில் மென்மேலும் சாதிக்க ஊக்கம் தந்து உறுதுணையாகத்தான் உள்ளனர். மேலும் எனக்கு சில உதவிகள் கிடைத்தால் இத்துறையில் என்னால் நன்றாக சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது.,மேலும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் இதற்கென உதவுவார்கள் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது என தெரிவித்தார் இந்த இளம் விளையாட்டு வீராங்கனை ரம்யா மகாலட்சுமி. விவசாயக் குடும்பத்தில் பிறந்து விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இந்த இளம் வீராங்கனையை பற்பல சாதனைகள் படைக்க நாமும் வாழ்த்துவோம்.
– தனுஜாஜெயராமன்.

 

Related posts

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது