ராமர் கோயில் தபால் தலைகள் பிரதமர் மோடி வெளியிட்டார்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலின் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் இருந்து ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தபால் தலைகள் கொண்ட புத்தகத்தையும் பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அயோத்தியில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விழாவில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், துறவிகள் என 7,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ராமர் கோயில் நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய தபால் தலைகள் அடங்கிய ஆல்பத்தையும் அவர் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், தபால் தலைகள் என்பது வெறும் தபால் தலைகள் அல்ல.காவியங்கள்,சிறந்த கருத்துகளை வெளிப்படுத்தும் வடிவமாகும். ராமர்,சீதை மற்றும் ராமாயணம் ஆகியவை சமூகம், ஜாதி, மதம், பிராந்தியங்களை கடந்து ஒவ்வொரு மக்களையும் இணைக்கும் சக்தியாக உள்ளது. மிகவும் கடினமான சமயங்களில் அன்பு, அர்ப்பணிப்பு, ஒற்றுமையை எடுத்துரைக்கிறது. இதனால்தான் ராமாயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து அனைவரும் மதிக்கும் காவியமாக திகழ்கிறது. ஏராளமான நாடுகள் ராமரின் தபால் தலைகளை வெளியிட்டுள்ளன.பல்வேறு நாகரிகங்களுக்கு மத்தியில் ராமாயணம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

* அயோத்தி ராமர் கோயிலில் திருப்பதி லட்டு
அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் ஒரு லட்சம் லட்டுகள் அனுப்பி வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக லட்டுகள் தயார் செய்யப்பட்டது. இந்த லட்டுகளை ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் மூலமாக ஜெய் ஸ்ரீராம் என்ற பக்தி முழக்கத்துடன் பேக்கிங் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. விரைவில் இந்த லட்டுகள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு ராம ெஜன்ம அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வழங்கப்பட உள்ளது.

* ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தினமான வரும் 22ம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஒன்றிய அரசு ஊழியர்கள் பங்கேற்க வசதியாக அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் மதியம் 2.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள்,ஒன்றிய அரசு நிறுவனங்கள், ஒன்றிய அரசின் தொழிற் சாலைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘‘ பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

* வாஸ்து பூஜை
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சடங்கு பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கியது. முதல்நாளில், கலச பூஜையும், இரண்டாம் நாள் ராமர் சிலையின் பரிசார் பிரவேச விழா நடைபெற்றது. 3வது நாளான நேற்று ஜலதிவாஸ், கணபதி பூஜை மற்றும் வருண பூஜை நடைபெற்றது. கோயில் வளாகத்துக்குள் வாஸ்து பூஜைகளும் நடைபெற்றது. இதில்,121 பூசாரிகள் பங்கேற்றனர்.

* வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் அமைச்சர்களுக்கு வலியுறுத்தல்
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதுபற்றி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி வரும் 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக தினத்தில் அமைச்சர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் விளக்குகளை ஏற்றி தீபாவளி போல் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். 22ம் தேதிக்கு பின் அவரவர் மாநிலத்தை சேர்ந்த பக்தர்களுடன் ராமர் கோயிலுக்கு செல்ல என்று கேட்டு கொண்டார்’’ என தெரிவித்தன.

* பால ராமர் சிலை பீடத்தில் நிறுவப்பட்டது
ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய பால ராமர் சிலை ஆகம முறைப்படி நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. பால ராமர் சிலை கருப்பு நிற கல்லால் செய்யப்பட்டது. மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் சிலையை வடிவமைத்துள்ளார். ராமர் சிலைக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. ஆகம முறைப்படி வேத விற்பன்னர்கள் சடங்குகளை செய்தனர். நேற்று மதியம் 12.30 மணிக்கு பீடத்தில் பால ராமர் சிலை நிறுவப்பட்டது.

* தரையில் படுத்து தூங்கும் மோடி
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பிரதமர் மோடி 11 நாள் விரதம் மேற்கொண்டு வருகிறார். விரதத்தின் போது அவர் இளநீரை மட்டுமே குடிக்கிறார். போர்வையுடன் தரையில் படுத்து தூங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி