ராமேஸ்வரம் மண்டபம் முதல் மாமல்லபுரம் வரை கடலில் நீந்தி சிறப்பு குழந்தைகள் சாதனை

மாமல்லபுரம்: ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் வடக்கு கடலோர பகுதியில் இருந்து சென்னை மெரீனா கடற்கரை வரை 604 கிமீ தூரத்திற்கு கடலில் நீந்தி சாதனை படைப்பதற்காகவும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காகவும், சென்னையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1 பெண் உட்பட 15 சிறப்பு குழந்தைகள், பயிற்சியாளர்களுடன் மண்டபம் பகுதியில் இருந்து பெற்றோர் ஏற்பாட்டுடன் பலத்த பாதுகாப்புடன் கடந்த 5ம்தேதி கடலில் நீச்சல் பயணத்தை தொடங்கினர்.

இந்நிலையில், 15 மாற்றுத்திறனாளி சிறப்பு குழந்தைகள் கடலில் நீந்தி நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்தனர். அவர்களை, சிறப்பு குழந்தைகளின் பெற்றோர், தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவன தலைவர் அன்பழகனார், மாமல்லபுரம், பட்டிப்புலம், நெம்மேலி மீனவ பஞ்சாயத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் மாலை போட்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இன்று காலை 6 மணிக்கு மீண்டும் கடலில் நீந்தி மெரீனா கடற்கரையில் சுதந்திர தினமான நாளை பயணத்தை முடிக்கின்றனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘தினமும் காலை 6 மணிக்கு துவங்கி காலை – மதியம் உணவு இடைவெளி தவிர்த்து மாலை 6 மணி வரை கடலில் நீந்துகின்றனர். ஒவ்வொரு, இரவும் தொண்டி, காட்டுமாவடி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பழையாறு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, மரக்காணம் ஆகிய பகுதிகளில் இரவு தங்கி ஓய்வு எடுத்து விட்டு மாமல்லபுரம் வந்தோம். இங்கு, மீனவ பஞ்சாயத்தார், மாமல்லபுரம் மீனவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

முழுக்க முழுக்க பெற்றோர் ஏற்பாட்டில் நடக்கிறது. இதில், வாய் பேச முடியாத கண் பார்வை இல்லாத, சரியாக நடக்க முடியாத மாற்றுத்திறனாளி 15 குழந்தைகள் நீந்துகின்றனர். தனியார் மூலம் நிதியுதவி பெறப்பட்டு நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் ஆகிய எங்களால் எதையும் செய்து காட்ட முடியும் என நிருபிக்கவும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவும் நீந்துகின்றனர். 11 நாட்கள் நீந்தி சுதந்திர தினமான நாளை சென்னை மெரீனா கடலோர பகுதியில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்