ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல்: கடற்கொள்ளையர்களும் ஆயுதங்களால் தாக்கியதில் 4 பேர் படுகாயம்

ராமேஸ்வரம்: கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்தது. இதனால் மீன்பிடிக்க முடியாமல் கரைதிரும்பிய மீனவர்கள் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 31ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படை ரோந்து கப்பலால மோதியதில் மீனவர் மலைச்சாமி கொல்லப்பட்டார். இதை கண்டித்து 8 நாட்கள் ஸ்டிரைக்கிற்கு பிறகு, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் கற்களை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தி விரட்டினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், மூன்று படகுகளில் இருந்த மீன் வலைகளை வெட்டிவிட்டு இலங்கை கடற்படையிடம் சிக்காமல் உயிர்தப்பினர். இதையடுத்து நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள் வலையில் மிகவும் குறைவான மீன்களே இருந்தன. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியங்களுக்கு ஒன்றிய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் வலியுறுத்தினர்.

கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து சிவசங்கர் தனது பைபர் படகில் ராஜகோபால், தனசேகரன், செல்வ கிருஷ்ணன் ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை கடலில் மீன் பிடிக்க சென்றார். கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் நேற்று முன்தினம் இரவு வலை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைபர் படகில் இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 4 பேர் வந்து மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்து, கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஏறி சரமாரியாக தாக்கினர்.

படகில் வைத்திருந்த 700 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், டார்ச்லைட் மற்றும் செயின், மோதிரம் உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு தப்பினர். அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்களும், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆறுகாட்டுத்துறைக்கு திரும்பி கடலோர காவல் குழும போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர் 4 பேரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

பாம்பன் மீனவர்கள் ஸ்டிரைக் துவங்கியது
இலங்கை கடற்படையினர் கடந்த 8ம் தேதி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேரையும், 4 நாட்டுப்படகுகளுடன், கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைபிடிக்கப்பட்ட 35 மீனவர்களையும், நான்கு நாட்டுப் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாம்பன் வடக்கு கடற்கரையில் ஏராளமான நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரைநிறுத்தம் செய்யப்பட்டன.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரணை நிறைவு

நிஃபா வைரஸ் எதிரொலி: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை விட அக்சர் படேலுக்கு அதிக வாய்ப்பு