ராமேஸ்வரம் அருகே அரசு அனுமதியின்றி பனைமரங்கள் வெட்டி சாய்ப்பு: வருவாய்த்துறையினர் விசாரணை

ராமேஸ்வரம்: அரசு அனுமதியின்றி மீறி ராமேஸ்வரம் அருகே ஏராளமான பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது பற்றி, வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அழிவின் விளிம்பில் இருக்கும் பனை மரத்தை வெட்டக்கூடாது என தீர்மானம் உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் பனை மரம் வெட்டுவதற்கு கலெக்டர் அனுமதி கட்டாயம் வேண்டும். மீறி பனை மரத்தை வெட்டினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என நீதிமன்ற உத்தரவும் உள்ளது.

ராமேஸ்வரம் ராமர் பாதம் அருகே வடகாடு செல்லும் சாலையோரத்தில் உள்ள இடத்தில் பல ஏக்கர் அளவில் பனை மரங்கள் உள்ளன. பனை மரங்களை இடத்தின் உரிமையாளர் தரப்பினர், எவ்வித அரசு அனுமதியுமின்றி வெட்டி சாய்த்து அழித்தனர்.இதில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ராமேஸ்வரம் தாசில்தார் செல்லப்பாவிடம் கேட்டபோது, ‘‘ராமேஸ்வரம் தீவு பகுதிக்குள் பனை மரங்களை வெட்டுவதற்கு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. தற்போது பனை மரங்கள் வெட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளரிடம் உரிய அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்’’ என்றார்.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி