பெண் குழந்தைகளின் பாலின விகிதம் உயர்வு.. ராமநாதபுரம், காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட நிர்வாகங்களுக்கு விருது!!

சென்னை :பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றிய இராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.3.2024) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றிய இராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் அம்மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றிய மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு பதக்கங்கள்

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் பாராட்டு பத்திரங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளில் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. 2023-2024ஆம் ஆண்டில், மாவட்டத்தின் பிறப்பு பாலின விகிதம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், உயர் பிறப்பு விகிதம் மற்றும் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள். சட்டம் ஆகிய காரணிகளை கவனமுடன் பரிசீலித்து, இராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அம்மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளதை பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பி. விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்களுக்கு தங்கப் பதக்கமும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ராஜ கோபால் சுன்கரா, இ.ஆ.ப., அவர்களுக்கு வெண்கலப்பதக்கமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் திருமதி. ஜெயஸ்ரீ முரளீதரன், இ.ஆ.ப., சமூக நல ஆணையர் திருமதி. வே. அமுதவல்லி இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!