ராமநாதபுரம் அரசு விழாவில் அமைச்சருடன் வாக்குவாதம் கலெக்டரை கீழே தள்ளி விட்ட முஸ்லிம் லீக் எம்பி ஆதரவாளர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவை முன்கூட்டியே துவங்கியதாக கூறி, கலெக்டரை கீழே தள்ளி விட்ட முஸ்லிம் லீக் எம்.பி ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் தனியார் பள்ளியில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பரிசு மற்றும் பாராட்டு சான்றுகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். டிஆர்ஓ கோவிந்தராஜலு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்வர் கோப்பைக்கான பரிசு வழங்கி அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது: இந்த விளையாட்டு போட்டிகள் ஒரு மாதம் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என 8,190 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 1,851 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.41.58 லட்சத்திற்கான பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 பரிசுத்தொகையும், பாராட்டு சான்றும் வழங்கப்படுகிறது. இவர்கள் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு பேசினார்.

விழா பிற்பகல் 3 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் முன்கூட்டியே வந்ததால் பகல் 2.45 மணிக்கு விழா தொடங்கி விட்டது. அப்போது 2.50 மணிக்கு அங்கு வந்த எம்பி நவாஸ்கனி, நான் வருவதற்கு முன்பே, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஏன் விழாவை தொடங்கினீர்கள் என அமைச்சரிடம் கேட்டார். அதற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி தான் முன்கூட்டியே விழாவிற்கு வர வேண்டும் என தெரிவித்தார். மேலும் அமைச்சரிடம் ஆவேசமாக கையை நீட்டி ஒருமையில் பேசி எம்பி தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது எம்பி நவாஸ்கனியை, கலெக்டர் விஷ்ணு சந்திரன் சமாதானம் செய்ய முயன்றார். அப்போது அங்கு ஆவேசமாக வந்த எம்பியின் ஆதரவாளர்கள் கலெக்டரின் நெஞ்சில் கையை வைத்து தள்ளி விட்டனர். அப்போது நிலை தடுமாறி கலெக்டர் கீழே விழுந்தார். கீழே விழுந்த கலெக்டரை, அவரின் தனி பாதுகாவலர் தூக்கி விட்டார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2060-ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐநா

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு