உ.பி, கர்நாடகா, இமாச்சலில் ராஜ்யசபா தேர்தல் 17 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு?: இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: உ.பி, கர்நாடகா, இமாச்சலில் இன்று நடந்த ராஜ்யசபா தேர்தலில் 17 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததாக கூறப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாகும் 56 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் 12 மாநிலங்களில் இருந்து 41 ராஜ்யசபா இடங்களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள மூன்று மாநிலங்களான உத்தரபிரதேசத்தில் 10 இடங்கள், இமாச்சல பிரதேசத்தில் ஒரு இடம், கர்நாடகாவில் 4 இடங்களுக்கான தேர்தல் இன்று நடந்தது வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு தொடங்கி இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, பாஜகவிலிருந்து 8 வேட்பாளர்களும், சமாஜ்வாதி கட்சி சார்பில் 3 பேர் என மொத்தம் 11 பேர் போட்டியிட்டனர். இவற்றில் 7ல் பாஜக வேட்பாளர்கள் வெல்வது உறுதியாகிவிட்டது. அதேபோல, சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 3 இடங்களை அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமாஜ்வாதியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர், கட்சி மாறி வாக்களிக்கக் கூடும் என்ற அச்சமும் அக்கட்சித் தலைமையிடம் நிலவியது. நேற்றிரவு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஏற்பாடு செய்த விருந்தில், 7 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாததால் அவர்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இமாச்சல் பிரதேசத்தில் காலியாக உள்ள 1 மாநிலங்களவை இடத்திற்கான தேர்தலில், மொத்தமுள்ள 68 எம்எல்ஏக்களில் தற்போது வரை 67 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 9 பேர் கட்சி மாறி வாக்களித்ததாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் 4 இடங்களுக்கான தேர்தலில் யஷ்வந்த்பூர் பாஜக எம்எல்ஏ எஸ்.டி.சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. கட்சி மாறி வாக்களித்த பாஜக எம்எல்ஏவின் செயலை முகவர் ஒருவர் பார்த்ததால், இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏ எஸ்சி சோமசேகர் கூறுகையில், ‘கடந்த 11 ஆண்டுகளாக அனைவருக்கும் வாக்களித்துள்ளேன். ஆனால் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை. மனசாட்சிபடி வாக்களிப்பேன். கடந்த முறை நான் (தற்போதைய ஒன்றிய நிதியமைச்சர்) நிர்மலா சீதாராமனுக்கு வாக்களித்தேன். ஆனால் அவர் என்னை சந்திக்க அப்பாயின்மென்ட் கூட கொடுக்கவில்லை’ என்றார். இன்றைய தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 7 சமாஜ்வாதி எம்எல்ஏக்களும், கர்நாடகாவில் ஒரு பாஜக எம்எல்ஏவும், இமாச்சலில் 9 எம்எல்ஏக்களும் சேர்ந்து 17 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததாக கூறப்படுகிறது.

 

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு