திமுக கூட்டணியில் புதிதாக இணைந்த மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு மாநிலங்களவை சீட்: முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில் திமுக கூட்டணியில் புதிதாக மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய போவதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் 1 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

பின்னர் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும், 2025ம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்வது என உடன்படிக்கை ஏற்பட்டது.

அந்த உடன்படிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், கமல்ஹாசனும் கையெழுத்திட்டனர். அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, அமைச்சர் எ.வ.வேலு, திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் எ.அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அந்த ஒப்பந்தத்தில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கலந்து பேசியதில், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்வதெனவும், வருகிற 2025ம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன் அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதாக இல்லை. எனது கட்சியும் அப்படி தான். ஆனால், இந்த கூட்டணிக்கு எங்களுடைய எல்லா ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயமே அல்ல. நாட்டிற்கான விஷயம் என்பதால், நான் எங்கு கை கொடுக்க வேண்டுமோ, அங்கே கை கொடுத்து இருக்கிறேன்’’ என்று கூறினார்.

Related posts

இறங்குமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் கார் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 2 பேர் பலி

பெங்களூருவில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு