ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல அனுமதி: ஒன்றிய அரசு கடிதம்

புதுடெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன பிரிவு 142 வழங்கியுள்ள உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான சாந்தன் தன்னை தாய் நாடான இலங்கை செல்லுவதற்கு அனுமதிக்குமாறு இந்தியா, இலங்கை மற்றும் தமிழக அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘சாந்தன் இலங்கை திரும்ப ஒரு வாரத்தில் அனுமதிக்கான ஆணை வழங்கப்படும்’’ என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘‘சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளது’’ என்று தமிழக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை பிப்ரவரி 29ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இந்நிலையில் ஒன்றிய அரசிடம் இருந்து தற்போது ஒரு கடிதம் திருச்சி மாவட்ட துணை ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கோரிக்கையை ஏற்று அவரை இலங்கை செல்ல அனுமதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த நகல் திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் கூறும்போது, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு கடிதத்தின அடிப்படையிலும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் சாந்தன் இலங்கை செல்ல போக்குவரத்து உட்பட அனைத்தையும் உயர்நீதிமன்றம் தெரிவிக்கும். இதைத்தொடந்து எந்த பிரச்சனையும் இல்லை என்றால் அவர் அனுப்பி வைக்கப்படுவார் என தெரிவித்தார். திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தன் மருத்துவ சிகிச்சைக்காக தற்போது சென்னை ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related posts

டிரான்ஸ்பார்மரில் தூக்குப்போட்டு மின்வாரிய அதிகாரி தற்கொலை

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து 2 பேர் உயிரிழப்பு

அரசு பஸ் கார் மீது மோதி 2 பேர் பலி