ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை, லண்டனுக்கு அனுப்ப முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை, லண்டனுக்கு அனுப்ப முடியாது. இலங்கை தூதரகம் உரிய ஆவணங்கள் வழங்கும் பட்சத்தில் இலங்கைக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்று உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. லண்டனில் உள்ள மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், பாஸ்போர்ட் கோரி முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். திருச்சி முகாமில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அவர் செல்லும் போது உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தி, 1991 மே 21ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். மனித வெடிகுண்டாக செயல்பட்ட தனு சம்பவத்திலேயே இறந்துவிட்டார். கொலைச் சதியின் பின்னணியில் இயங்கியதாக சிபிஐ கண்டறிந்த சிவராசன், சுபா உள்ளிட்டோர் பெங்களூருவில் தங்கியிருந்த வீட்டை போலீஸ் சுற்றி வளைத்த நிலையில் அவர்கள் சயனைடு அருந்தி இறந்துவிட்டனர். இவர்கள் தவிர பல்வேறு காரணங்களுக்காக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு இதற்கென அமைக்கப்பட்ட தடா சிறப்பு நீதிமன்றம் 1998 ஜனவரி 28-ம் தேதி மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆறு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நளினியும் முருகனும் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்கள் மீண்டும் சந்திக்க முடியாமல் போனது. காரணம் முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் நளினி, பேரறிவாளனை போல் வீடுகளில் தங்க முடியாது. அவர்களை திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்