ராட்சச விளைச்சல் கொடுக்கும் ராஜஸ்தான் கம்பு!

நம்ம ஊரில் விளைவிக்கப்படும் கம்பு வகைகளை பொதுவாக நாட்டுக்கம்பு, விவசாயக் (வீரிய ரகம்) கம்பு என அழைப்போம். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள வட்டூர் என்ற கிராமத்தில் கணபதி என்ற இளம் விவசாயி பயிரிட்டு இருக்கும் கம்பின் பெயர் சுல்கானியா பாஜ்ரா கம்பு. பெயரே வித்தியாசமாக இருக்கிறதா? பெயர் மட்டுமல்ல… அதன் விளைச்சலும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. நம்ம ஊரில் விளையும் கம்மங்கதிர்களின் உயரம் 1 அடி இருந்தாலே பெரிது. இந்தக்கம்பு 3 அடியில் இருந்து 5 அடி வரை நீளமாக இருக்கும். கம்மம்பயிரும் ஏகத்துக்கும் வளர்ந்திருக்கிறது. வயலுக்குள் சென்றால் நாம் இருப்பதே வெளியில் தெரியாது. அந்தளவுக்கு நெடு நெடுவென்று வளரும்.

கணபதியின் வயலும் அப்படித்தான் இருக்கிறது. அடர்ந்து செழித்துள்ள வயலில் கம்மங்கதிர்கள் நீளம், நீளமாய் வளர்ந்து கிடக்கின்றன. கணபதி, அவரது தந்தை, தாயார் என குடும்பமே பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அந்த வயலுக்கு சென்றோம். புன்னகையோடு வரவேற்றுப் பேசினார் கணபதி. “எங்கள் குடும்பம் காலம் காலமாக தொடர்ச்சியாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. எங்களது நிலத்தில் துவரை, கம்பு, நிலக்கடலை, உளுந்து, காய்கறி என சாகுபடி செய்துகொண்டே இருப்போம். சிறுவயதில் இருந்து அப்பா, அம்மாவுடன் வயலுக்கு செல்வேன். இதனால் அனைத்து விவசாய வேலைகளும் அத்துப்படி. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து இருக்கிறேன். ஆனால் விவசாயம்தான் நமக்கு தொழில் என முடிவு எடுத்திருக்கிறேன். விவசாயத்தில் புதிய ரக பயிர்களைப் பயிரிட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் எனக்கு. இதனால் வேறு மாநிலப் பயிர்களையும் கூட எனது நிலத்தில் பயிரிட்டு அதன் மகசூல் எப்படி இருக்கிறது? என சோதித்துப் பார்ப்பேன். நன்றாக இருந்தால் அந்த விதைகளை மற்ற விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிப்பேன். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயி ஒருவர் கண்டுபிடித்த புதிய ரக கம்பு ஒன்று மூன்றில் இருந்து ஐந்து அடி வரை உயரத்திற்கு வளர்வதாகவும், நம்ம ஊர் நாட்டு ரகக் கம்பை விட மூன்று மடங்கு அதிக மகசூல் தருவதாகவும் அறிந்தேன். அந்த ராஜஸ்தான் விவசாயியைத் தொடர்புகொண்டு, அவர் கண்டுபிடித்த கம்பு விதைகளை வாங்கி எனது நிலத்தில் பயிரிட்டேன்.

கம்பைப் பொருத்தவரை அனைத்து விதமான மண்ணிலும் நன்றாக வளரும். இதனால் எங்களுக்குச் சொந்தமான களிமண் பாங்கான ஒரு ஏக்கர் நிலத்தில் அந்தக் கம்பைப் பயிரிட்டேன். அந்த நிலத்தில் நாற்று நடுவதற்கு முன்பாக மூன்று முறை மண்ணை நன்றாக உழுதோம். முதல் இரண்டு முறை நன்றாக மண்ணை உழுது மூன்றாவது முறையாக உழும்போது ஒரு ஏக்கருக்கு மூன்று டிராக்டர் தொழு உரம் கொட்டினோம். ஒரு ஏக்கருக்கு கம்பை நேரடியாக விதைத்தால் நான்கு கிலோ விதைகள் தேவைப்படும். அதுவே நாற்றங்கால் முறையில் விதைத்தால் ஏக்கருக்கு இரண்டு கிலோ விதைகள் போதுமானது. அதனால் நான் நாற்றங்கால் நடவு முறையில் நடவு செய்தேன். கடைசி உழவு முடிந்த இரண்டு நாட்களுக்குள் விதைக்க ஆரம்பித்தால் சரியான விதைப்பாக இருக்கும். அதேபோல, நாற்றங்காலில் விதைத்து பதினைந்து நாட்களுக்குள் நாற்றை எடுத்து விதைக்க ஆரம்பிக்க வேண்டும். நடவு செய்யும்போது அடுத்தடுத்த நாற்றின் இடைவெளி ஒரு அடியாகவும், ஒரு வரிக்கும் அடுத்த வரிக்குமான இடைவெளி ஒன்றரை அடி இடைவெளியாகவும் இருக்க வேண்டும். ஒரு நடவில் மூன்று, நான்கு நாற்றுகள் வைத்து நடலாம். நடவுப் பணியை தொடங்கும்போது நிலத்தில் நன்றாக தண்ணீர் விட்டு நிலம் நன்றாக ஈரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரமாக இருந்தால்தான் செடியின் வேர் நன்றாக முளைக்க ஏதுவாக இருக்கும்.

கம்பு சாகுபடியைப் பொருத்தவரை மழைக்காலம் உகந்தது கிடையாது. கோடைக்காலத்தில் விதைத்தால்தான் மகசூல் அதிகமாக கிடைக்கும். மழைக்காலத்தில் விதைத்தால் பூக்கள் வீணாகிவிடும். இதனால் கம்பு சரியாக விளைச்சல் தராது. கம்பு சாகுபடியில் பராமரிப்பு வேலைகளை சரியான பருவத்தில் செய்ய வேண்டும். நோய்த் தாக்குதல் மிகவும் குறைவுதான். இதனால் நோய் தாக்கும் என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், சில நேரங்களில் படைப்புழுக்கள் ஆங்காங்கே தென்படும். அதனை மட்டும் அப்போதே நீக்கிவிட வேண்டும். அதேபோல, கம்பு பயிரிட்ட நிலத்தை எப்போதும் வாடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். நிலத்தைப் பொறுத்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும். நாற்று நட்டு 25 நாட்கள் கழித்து செடியின் வளர்ச்சியைப் பார்த்து மண் அணைக்க வேண்டும். அதாவது கம்பின் வேர்ப்பகுதி காற்றில் ஆடாத வகையில், அதன் அடியில் இரண்டு பக்கமும் மண்ணை வைத்து அணைக்க வேண்டும்.

பயிர் வளர வளர மண் அணைப்பை சரியாக செய்ய வேண்டும். 25வது நாளில் மண் அணைக்கும்போது களை எடுப்போம். அந்த நேரத்தில் பாக்டம்பாஸ் உரத்தை ஏக்கருக்கு 50 கிலோ என்ற அளவில் தூவ வேண்டும். இதற்கு இயற்கை உரத்தையும் பயன்படுத்தலாம். கம்மம்பயிர் எப்போதும் ப்ரெஷ்ஷாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த முறையில் விவசாயம் செய்தாலே நல்ல விளைச்சல் எடுத்து விடலாம். இந்த ஒரு ஏக்கரில் கம்பு சாகுபடி செய்ய மருந்து, களையெடுப்பு, தொழுஉரம் என இதுவரை ஒன்பது ஆயிரம் செலவாகி இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் அறுவடை செய்யவிருக்கிறோம். அறுவடைச் செலவிற்கு ஏக்கருக்கு மூவாயிரம் வரை செலவாகும். அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரத்திற்குள் செலவாகும். நம்ம ஊர் நாட்டு ரகக் கம்புகளை விட மூன்று மடங்கு விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் லாபத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அறுவடை செய்யப்படுகிற கம்புகளை எங்கள் பகுதியில் உள்ள வியாபாரிகளே வாங்கிக்கொள்கிறார்கள். சராசரியாக ஒரு கிலோ ரூ.40 என வாங்கிக் கொள்கிறார்கள். தோராயமாக எங்களது நிலத்தில் ஒன்றரை டன் கம்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். செலவு எல்லாம் போக கைக்கு நாற்பது ஆயிரத்திற்கும் மேல் லாபம் கிடைக்கும். அதுவும் நாம் எதிர்பார்த்த மகசூல் வரவேண்டும். இந்த புதிய ரக கம்பு எல்லா மண்ணிற்கும் உகந்தது என்றாலும் அதன் பராமரிப்பிலும், விதைத் தேர்விலும் கவனமாக இருக்க வேண்டும். சரியான முறையில் விதைத்து, சரியான பருவத்தில் அறுவடை எடுத்தால் லாபம் உறுதி’’
அடித்துக்கூறுகிறார் கணபதி.
தொடர்புக்கு: கணபதி – 86758 67936.

சுல்கானியா பஜ்ரா சிறப்புகள்

இந்த புதிய ரக கம்பு ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதால் அவரது ஊர் பெயரில் இந்தக் கம்பு அழைக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்து இருந்தாலும் இந்தக் கம்பு, ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய கம்பாவாகவே பார்க்கப்படுகிறது. அவரது முன்னோர் காலத்தில் இருந்த கம்பை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார். நமது ஊரில் இருக்கும் கம்புகளின் வளர்ச்சிக்காலம் 90 நாட்கள் என்றால் இந்த புதிய ரக கம்பு வளர்வதற்கு 100 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும். அதேபோல, நமது நாட்டு ரக கம்பில் ஏக்கருக்கு விளைச்சல் 600ல் இருந்து 800 கிலோ வரைதான் இருக்கும். ஆனால், இந்தப் புதிய ரக கம்பில் ஒன்றரை டன்னில் இருந்து இரண்டரை டன் வரை விளைச்சல் கிடைக்கும். நமது ஊர் கம்பு முக்கால் அடியில் இருந்து ஒரு அடி வரை வளரும். பஜ்ரா கம்பு மூன்றில் இருந்து ஐந்தடி வரை வளரும். நமது ஊர் கம்பில் ஒன்றரை அடி உயரத்தில் மூன்று கிளைகள் இருக்கும். பஜ்ராவில் 8 கிளைகள் வரை வளர்ந்திருக்கும். அதேபோல, சுவையிலும் இந்த புதிய ரக கம்பு நன்றாக இருக்கும். இதனால் பலர் சிறுதானிய உணவகங்களுக்கும், கூழ் செய்வதற்கும், சத்துமாவுகள் தயாரிக்கவும், தீவனமாகவும் வாங்கிச் செல்கிறார்கள். வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை, கச்சிதமான விதைப்பு, கூடுதலான வளர்ச்சி, அதிக மகசூல், சத்தான தானியங்கள், அதிக இனிப்பு என பல சிறப்புகள் பஜ்ராவுக்கு இருக்கிறது. இது கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக இருக்கும்.

முன்னோர்களின் பொக்கிஷம்!

இந்த புதிய ரக கம்பைக் கண்டுபிடித்த விவசாயியின் பெயர் ஹனுமான ராம் ஜூரியா. ராஜஸ்தானின் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் கவிதைகளில் ஆர்வம் கொண்டவர். ஓய்வு நேரத்தில் வசனங்கள் மற்றும் கவிதைகளும் எழுதுகிறார். இந்தக் கம்பின் விதைகள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மதகுருவால் அவரது முன்னோர்களுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனை இத்தனை வருடங்களாக தலைமுறை கடந்தும் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அவரது கிராமத்தில் உள்ளவர்கள் கலப்பினக் கம்பு வகைகளை பயிரிடுவதற்கு மாறியபோது, அவர் சுல்கானியா பஜ்ராவை பாதுகாக்கும் பணியில் இருந்தார். ஒவ்வொரு முறையும் அந்த தானியங்களில் வேப்ப இலைகள் கலந்து வைத்து, விரைவில் கெட்டுபோகாத வகையில் பாதுகாத்து, அந்த விதைகளை பயிரிட்டு இருக்கிறார். விளைந்த கம்பில் நீளமாக வளர்ந்த கருதுகளைத் தேர்வு செய்து, அவற்றை மீண்டும் மீண்டும் பயிரிட்டுப் பார்த்திருக்கிறார். இவ்வாறு பலமுறை பயிரிட்ட பின் முழுமையாக வளரும் தன்மை கொண்ட விதைகளைசேகரித்து, மற்ற விவசாயிகளுக்குக் கொடுத்த விதை பரவலாக்கம்செய்திருக்கிறார்.இப்போது இந்தக் கம்பை குஜராத் மற்றும் ராஜஸ்தான் விவசாயிகள் பெருமளவில் பயிரிடுகிறார்கள். இந்த விதையைக் கண்டுபிடித்ததற்காக மத்திய அரசின் FOIN சார்பில், புதிய கண்டுபிடிப்புக்கான விருதும் பெற்றிருக்கிறார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி