ராஜஸ்தானில் பலன்ஹார் திட்டத்தில் 5.91 லட்சம் குழந்தைகளுக்கு ரூ.146.74 கோடி நிதி விடுவிப்பு: முதல்வர் அசோக் கெலாட் வழங்கினார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பலன்ஹார் திட்டத்தின் கீழ் 5.91 லட்சம் குழந்தை பயனாளிகளுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான ரூ.146.74 கோடி நிதி உதவியை முதல்வர் அசோக் கெலாட் வழங்கினார். ராஜஸ்தானில் ஆதரவற்ற குழந்தைகள், மரணதண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், விதவை பென்ஷன் பெறுவோரின் குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், பலனஹார் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 முதல் ரூ.2500 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 5.91 லட்சம் குழந்தை பயனாளிகளுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான ரூ.146.74 கோடி நிதியை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் விடுவித்தார். இந்த தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதன் மூலம், ஜூன் மாதத்திற்கு 5 லட்சத்து 92 ஆயிரத்து 630 பயனாளிகளுக்கு ரூ.59.38 கோடியும், ஜூலை மாதத்திற்கு 5 லட்சத்து 91 ஆயிரத்து 730 பயனாளிகளுக்கு ரூ.87.36 கோடியும் வழங்கப்படுகிறது.

தனது இல்லத்தில் நடந்த நிதி விடுவிப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அசோக் கெலாட், ‘‘இந்த திட்டத்தில் 9 வகையான பிரிவினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.300 கோடி கூடுதல் சுமை ஏற்படுகிறது. முந்தைய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை மூடாமல் நாங்கள் நிதி உதவியை அதிகரிப்படுத்தி உள்ளோம். நாட்டின் முன்னேற்றத்தில் இந்த குழந்தைகள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இது ஒரு தனித்துவமான முயற்சி. எனவே இந்த திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். தகுதியான எந்த ஒரு குழந்தை கூட இந்த திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக் கூடாது., அதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்