ராஜபாளையம் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3 கோடி கோயில் நிலம் மீட்பு

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பு கோயில் நிலங்களை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் பிரசித்திபெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. அறநிலையத்துறை வசமுள்ள இக்கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கர் நிலம் தேவதானம் அம்மையப்பா கூட்டுறவு குத்தகைதாரர் விவசாய சங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

கூட்டுறவு சங்கம் குத்தகை பணத்தை முறையாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை மூலம் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை உடனடியாக மீட்குமாறு அறநிலைத்துறைக்கு வருவாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையாளர் வளர்மதி தலைமையில் ஆலய நிலங்கள் குத்தகை வட்டாட்சியர் மாரிமுத்து, கோயில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார் உள்பட 50க்கும் மேற்பட்ட அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று தேவதானம் கிராமத்திற்கு வந்தனர். அங்கிருந்த 103 ஏக்கர் குத்தகை நிலத்தை மீட்டனர்.

இதன் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலங்களில் பாதி தரிசாகவும், மீதி நெல் நாற்று பாவியும், நெல் நடவு செய்து 40 நாட்கள் ஆகியும் இருந்தது. இந்த பகுதியில் யாரும் நுழையக்கூடாது என அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை ஊன்றப்பட்டது.
விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட ஆலய நிலங்கள் குத்தகை வட்டாட்சியராக மாரிமுத்து பொறுப்பேற்றதில் இருந்து வத்திராயிருப்பு, தேவதானம் பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 975 புள்ளி உயர்ந்து 84,160-ல் வர்த்தகம்

இலங்கை அதிபருக்கான தேர்தலில் நாளை வாக்குப்பதிவு: முதன் முறையாக 38 வேட்பாளர்களுடன் சுமார் 2அடி நீளம் கொண்ட வாக்குசீட்டு தயாரிப்பு!

ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு வழங்கிய ஆணை ரத்து!