ராஜகோபுர மனசு

பகுதி 4

ஒரு நல்லநாளில், கோபுர ப்பணிகள் துவங்கும்படி உற்சாகமாய் கட்டளையிட்டார். கோபுரங்களுக்கான வரைபடங்களையும், சிற்பங்களுக்கான ஓவியங்களையும் உடனே தயாரிக்கும்படி, ஸ்தபதிகளுக்கு உத்தரவிட்டு ஓலையனுப்பும்படி கூறினார். எல்லாவற்றுக்கும்முன், ‘‘நம் தேவாங்க குருவான ஜகத்குரு பண்டிதா தாத்ய சுவாமிகளை நேரில் போய் தரிசித்து, ‘‘இப்பணியை ஆசீர்வதிக்கும்படி வேண்டுமாறு’’ அரசிகளை கேட்டுக்கொண்டார்.

‘‘நம் எண்ணத்தை சரியான திசைநோக்கி, ஈசன் நகர்த்துகிறான். இனி ஒருகவலையுமில்லை’’ என்ற மிகுந்த நிறைவுடன் உறங்கப்போனார். மறுநாளே அரசிகள், தங்கள் குலகுருவைக் காண ஆந்திரம் நோக்கி, புறப்பட தயாரானார்கள். செல்லும் முன் மன்னராணையை, அனைவருக்கும் உத்தரவிட்டுச் சென்றனர். அரசிகள் உத்தரவின்படி, நல்லவர்கள் கூடிப்பேசினார்கள். எதிலிருந்து துவங்கவேண்டுமென ஆலோசித்தார்கள். அவர்களுக்கு வேதமறிந்த அந்தணர்கள் வழிகாட்டினார்கள்.

திசைகள் தீர்மானிக்கப்பட்டு, திசைகளில் கோபுரங்களமைப்பதற்கான இடங்களும் தீர்மானிக்கப்பட்டன. அந்தந்த திசைகளிலுள்ள எல்லைக்காவல் தெய்வங்களின் அனுமதி கேட்டும், துணை நிற்கும்படி வேண்டியும், ஆடும் கோழியும் பலிகொடுக்கப்பட்டன. இதற்கிடையே, ஆந்திரம் சென்று, படவேடுராயசிம்மாசன மடத்தின் தேவாங்ககுரு, ஐகத்குரு பண்டிதா தாத்ய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்று, மடம் வழங்கிய, பிரசாதங்களுடனும், காப்புக் கயிறுகளுடனும், அரசிகள் திரும்பி வந்தனர், மடம் வழங்கிய, ஆசியுடன் கூடிய வாழ்த்து மடலை, மன்னர் வீரவல்லாளனிடம் வழங்கினார்கள்.

அதோடு மன்னரின் வெகுநாள் விருப்பமான லிங்கபூசைக்கான தீட்சையை வழங்க, ஜெகத்குரு சம்மதித்திருப்பதையும், கோபுரதிற்கான பூமிபூஜை முடித்ததும், நேரில்வர அனுமதிதந்த சேதியையும் கூறியதோடு அல்லாமல், இப்பணி முடியும்வரை, சிகையும், தாடியும் மழிக்காதிருக்கும்படி கூறிய, அவர் உத்தரவையும் தெரிவித்தார்கள். தீட்சை பற்றிய தகவல் கேட்டு, மன்னர் உற்சாகமானார். தன் குலகுருவின் திசைநோக்கி, கைகள்கூப்பி வணங்கினார். மெல்ல வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

கோபுரப்பணியிடத்தின் வடக்குமூலையில், ஸ்தபதிகள் தங்குவதற்கான விஸ்தாரமான கொட்டாரங்கள் அமைக்கப்பட்டன. பணியாட்கள் தங்க, குடிசைகள் வேயப்பட்டன. சுவர்வசதிகளிலும் ஒருகுறைவுமில்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. அருணை, ஒருபெருங்கூட்டத்தை தாங்க தயாரானது. பாறைகள் தேடிப் போனவர்கள், நல்லசெய்திகளோடு திரும்பி வந்தார்கள். ஒருவார இடைவெளியில், விஸ்வகர்மா குலத்து தலைமைஸ்தபதி ரவீந்திர பெருந்தச்சன், தன் ஆட்களோடு அருணை வந்திறங்கினார். பாறைகளை தரம்பார்த்து கொண்டுவர, தம்மாட்களில் சிலரை, பாறை தேடிப் போனவர்களோடு அனுப்பினார். மற்றாட்களோடு கோபுரத்திற்கான இடங்களை சுற்றிப்பார்த்தார். வாஸ்துமூலையில் சம்மணமிட்டு அமர்ந்து, கண்மூடிதியானித்து, யாரிடமோ அனுமதி கேட்டார்.

சில நிமிடங்கள் கழித்தெழுந்தவர், வானம்பார்த்து, ‘‘சந்தோசம்’’ என வணங்கினார். திரும்பி, ‘‘ம்ம்ம்’’ என தன் ஆட்களுக்கு உத்தரவிட்டார். ஸ்தபதிகள் கயிற்றினைக் கொண்டு, ஏதேதோ அளந்தனர். அங்குமிங்கும் நடந்து, கால்களால் அளந்து பார்த்தனர். அப்படி செய்துகொண்டிருக்கும்போது, எங்கோ மேய்ந்துகொண்டிருந்த காராம்பசு, முட்டிப் பால்குடிக்கும் கன்றோடு கோபுரநிலத்திற்கு வந்து, சாணமிட்டது. கோமியம் கழிந்தது.

ஓடிப்போய், அதை உள்ளங்கையில் பிடித்து, நிலத்தில் விசிறித் தெளித்த ஸ்தபதி ரவீந்தர பெருந்தச்சன், இது நல்ல சகுனமென்றும், இப்போதே அரசரை சந்திக்க வேண்டுமென்றும் அனுமதி கேட்டார்.அனுமதி கிடைக்க, ரவீந்திரப் பெருந்தச்சனோடு, ஸ்தபதிகள் மன்னரை சந்தித்து, நான்கு திசைக்குமான கோபுரவரைபடங்களை விரித்து, விளக்கினர். மன்னரும், கோபுரப்பணிக்குழுவும் எழுப்பிய சந்தேகங்களுக்கு, பதிலளித்தனர். கோபுரங்களின் உயரம் பற்றி விவரித்தனர்.

அத்தனையையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த மன்னர், நிறைவாகி, அரசிகள் முகம் பார்த்தார். மூத்தராணி ‘‘சந்தோசம்’’ என்பதாக தலையாட்டினார். மௌனமாக நின்றிருந்த இளையராணியை, ‘‘என்ன சொக்கி’’ என்று கேட்க, ‘‘எனக்கும் சந்தோசம். ஆனால், ஸ்தபதிகளிடம் எனக்கொரு விண்ணப்பமுண்டு’’ என சல்லம்மாதேவி கூற, ‘‘கேள்’’ என மன்னர், ஸ்தபதிகளை கைகாட்டினார். இளையராணி ‘‘தனியே பேசவேண்டும்’’ என்றார். மன்னர் சிரித்தபடி, ‘‘சிரி, பேசு’’ என அனுமதிதந்தார். தலைமை ஸ்தபதியை தனியே அழைத்துப்போன சல்லம்மாதேவி, அவரிடம் ஏதோ கிசுகிசுத்தார். கிழக்குக்கோபுரத்தின் வரைபடத்தை கொண்டு வரச்சொல்லி, விரித்து, அதில் கைகாட்டி, ஏதோ பேசினார். மன்னரைத் திரும்பி, சில நொடிகள் உற்றுகவனித்த ஸ்தபதி ரவீந்திரப் பெருந்தச்சன், இளையராணியிடம் திரும்பி, ‘‘சரி’’ என்பதுபோல பணிவாக தலையாட்டினார். திரும்பி வந்த இளையராணியிடம், மூத்தராணி என்னவென்று கேட்க, ‘‘பிறகு சொல்கிறேன்’’ என்றார்.

‘‘இப்போது கேட்டால், இவள் பொய்சொல்வாள்’’ என்று நினைத்துக் கொண்ட மன்னர், எதுவும் கேட்காமல் புன்னகைத்துவிட்டு, பண்டாரத்தை நோக்கி கைகள்காட்ட, பணமுடிப்புவைத்த தாம்பாளம் அவரிடம் நீட்டப்பட்டது. சுருக்குப்பையினை கையிலெடுத்து மன்னர். ‘‘காலத்திற்கும் பேர்சொல்லும்படியாக, உங்கள் பணி இருக்கட்டும்’’ என வணங்கியபடி நின்றிருந்த தலைமை ஸ்தபதியிடம் பணமுடிப்பை வழங்கினார்.

‘‘உங்கள் வேலைகளை துவங்கலாம்’’ மற்ற ஸ்தபதிகளை பார்த்து புன்னகைத்தார். ஸ்தபதிகள் எல்லோரின் மனதிலும் எழுபதுஅடிக்கும் மேலான உயரத்தில், கோபுரங்கள் எழும்பியிருந்தன. ஸ்தபதிகள் தயாரானார்கள். ஒரு சுப முகூர்த்த நாளில், சுபஹோரை நாழிகையில், அரசிகளோடு வந்த மன்னர் முன்னிலையில், நான்குதிசை இடங்களிலும், பூஜை போடப்பட்டன.
வரைபடமளவு பார்த்து, அரிசிமாவுகலந்த கோலமாவினால், தரையில் வரைப் யபட்டது. முளைக்குச்சியடித்து, கயிறுகள் மந்திரித்து கட்டப்பட்டன. மடம் வழங்கிய காப்புக்கயிறுகள் அனைவருக்கும் கட்டப்பட்டன. முதல் ஆளாக மன்னர் கட்டிக் கொண்டார். மங்கல வாத்தியமுழக்கத்தோடு, முதல் கட்டுமானப்பணியாக, கிழக்குக்கோபுரம் ஆரம்பிக்கப்பட்டது.

எக்காளங்கள் முழங்க, முதல்பாறையை மன்னர் வீரவல்லாளன் எடுத்துக்கொடுக்க, அதிஷ்டானமூலையில் வைக்கப்பட்டது. பெண்கள் குலவையிட, முதல் ஆட்களாய், மல்லமாதேவியும், சல்லமாதேவியும் சேர்ந்து, நான்கு திசைகளிலும், நவதானியங்களைத் தூவி, புண்ணியநதித தீர்த்தங்கள் தெளித்தனர். அப்படி அவர்கள் செய்து கொண்டிருக்கும்போது, ஆசிர்வதிப்பதுபோல, ஊசித்தூறலாய் மழைபெய்தது, அனல்பூமியா அருணையை குளிர்வித்தது. பெய்யும் மழைநீைர, தன் உள்ளங்கையில் வாங்கி, தலையில் தேய்த்துக் கொண்ட யாரோவொரு மூத்தகிழவி, ‘‘இந்தமழை, மன்னருக்கு ஆசிர்வாதம்.

ஹோய்சாலத்திற்கு ஜெயம்’’ என்று உரத்தகுரலில் வாழ்த்தினாள்.

‘‘ஆம்’’ என்கிறவிதமாக, வருணனின் ஊசித்தூறல், மெல்லியமழையாக மாறி எல்லோரையும் ஆசிர்வதித்தது.

தொகுப்பு: குமரன் லோகபிரியா

Related posts

வலதுகாலை எடுத்து வைத்து வா… வா…

ஏழரைச் சனி என்ன செய்யும்?

புண்ணியங்களைப் புரட்டித் தரும் புரட்டாசிமாதம்