ராஜகோபுர மனசு

பகுதி 3

ஒரேநேரத்தில் ஒன்றிணைந்து பிளிறும், யானைக்கூட்டம்போல, ‘‘அண்ணாமலை ஈசனுக்கு அரோகரா’’ என உரத்தகுரலில் கூவியவர்களை சில நொடிகள் அனுமதித்துவிட்டு, பின் கைய மர்த்திய மன்னர் வீரவல்லாளன், தொடர்ந்து பேசினார்.‘‘இந்த மண்ணில் உடம்பெடுத்துள்ள ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொருப்பொறுப்புண்டு. மண்டியிருக்கிற புதரழித்து, ஒரு ஒற்றையடிப்பாதையயாவது உருவாக்குகிற, குறைந்தபட்சக் கடமையுண்டு’’‘‘இன்று நாம் பயன்படுத்துகிற ஏரியும், குளமும், யாரோ வெட்டியது. வயலும், நிலமும், யாரோ காடழித்து உருவாக்கியது. மரமும், தோப்பும் யாரோ விதையூன்றி, நீர்விட்டு வளர்த்தது.

நாமறிந்தேயிராத, காலம் மறந்துபோன ஒருதனிமனிதன், அடுத்த தலைமுறைமீதுகொண்ட, அக்கறையான பொறுப்பே, இன்று நாம் அனுபவிப்பது. அப்போது நமக்கான பொறுப்பெது?’’‘‘நம்பொறுப்பு, இந்த கோபுரப்பணிதானென நான் நினைக்கிறேன். நம் அடுத்ததலைமுறைக்கு, சைவம் குறித்த பெருமிதத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் விதமான இச்செயலுக்காகத்தான், நம் அனைவரின் ஜென்மமுமென நான் நம்புகிறேன். கூன்பிறைமதத்தாரின் தொல்லைகளை, தொடர்ந்து அனுபவிக்கும் மக்களை, தெம்பூட்டும் விதமான இப்பணியை முடிக்கவே, துவாரசமுத்திரத்திலிருந்து, நாமனைவரும் நகர்ந்து வந்தோம் போல.’’

‘‘உண்மையில், நாமெல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள்? இதைச்செய்ய நினைத்திருப்பதால், இவற்றையெல்லாம் உங்களுக்கு கட்டளையிடுவதால், நான் உங்கள்அரசனா? கிடையாது. என் சொல்லை பணிந்தேற்பதால், நீங்களெல்லோரும் என் அமைச்சரவைப் பெருமக்களா? இல்லவேயில்லை. என்மீது பேரன்புகொண்ட இந்த ஜனங்கள், என் கீழ்படிந்த மக்களா? அதுவுமில்லை.’’‘‘நாமெல்லோரும் சிவசிந்தனையால் ஒன்றிணைந்த அவன்பிள்ளைகள். சிவ நாமம் வாசிக்கவும், சிவனை பூசிக்கவும் பிறந்திருக்கிற சிவனடிமைகள். சிவசேவையை செம்மையாய் செய்து முடிக்க, கைலாயம் விட்டு நகர்ந்து, இந்த அருணைக்கு விஜயம் செய்துள்ள சிவபூதகணங்கள்.’’

இந்த வார்த்தை பேசும்போது, மன்னர் வீரவல்லாளன் ஆவேசமாக, விழிகள்விரித்து, சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார். மன்னரின் வார்த்தையால், சபையில் மொத்தபேருக்கும், ஒரே சமயத்தில் மயிர்க்கூச்செறிந்தது. அந்த சொல்லின் கணம் தாங்காமல், பெருமூச்சோடு ஆசனத்தில் சாய்ந்துகொண்ட வயதில் பழுத்த மூத்த அமைச்சரொருவரின் கண்களில் அவரையும் மீறி நீர்வழிந்தது. சாமரம் வீசுகிற பெண்ணொருத்தி, வீசுவதை ஒருகணம் நிறுத்திவிட்டு விசும்பினாள். சேடிப்பெண்களில் சிலர், முகம் பொத்திக்கொண்டார்கள். சபைக்கு முதுகுகாட்டி, மன்னர்பேச்சுக்கு மட்டும் காதுகொடுத்துக் கொண்டிருந்த வாயில்காவலாளி, அசையாதசிலையொன்று அழுவதுபோல கண்ணீர் விட்டான். ஆசனத்தில் அமர்ந்திருந்த இளம் தளபதியொருவன், எழுந்து ஆவேசமாக ‘‘என்சிவமே, என்சிவமே’’ அலறினான் அனைத்தையும் பார்த்துக்கொண்டே மன்னர் தொடர்ந்தார்.

‘‘இளையராணி கூறியபடி, இச்செயலுக்காக வரலாறு என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம்மை ஞாபகம் வைத்துக்கொண்டு, ஈசன்தந்த இந்த வரமே போதும், சிந்தனை எனதானாலும், மொத்தச்செயலும் என்மக்களுடையது. அவர்கள் பங்களிப்போடு நான் செய்யப்போவது. அதனால், இச்செயலுக்கான பெருமிதமோ, கர்வமோ, எனக்குள்ளில்லை.’’‘‘இதோ, மீண்டும் சூளுரைத்து சொல்கிறேன். இந்த நொடியிலிருந்து கோபுரத்திருப்பணி தொடங்குகிறது. ஈசனின் நான்குதிசைக்கும் கோபுரமெழுப்ப நினைக்கிற சிவச்செயல் ஆரம்பிக்கிறது. எம்மக்களே. எல்லோரும் தயாராகுங்கள். முப்புரமுமெரித்த ஈசனுக்கு காவலாக, அருணையின் நாற்புறமும் நாம் கோபுரமெழுப்புவது, சத்தியம்.

இது நம்குலதெய்வம், ஹோய்சாலேஸ்வரர்மீது ஆணை.’’ என மன்னர் வீரவல்லாளன். வலக்கை நீட்டி சத்தியம் செய்தார். மீண்டும் சபை ‘‘ஓம் நமசிவாய’’ என ஹூம்காரமிட்டது. மன்னரின் பெயர் சொல்லி வாழ்த்தியது. அமைதியாகும்படி சைகை செய்த மன்னர் மீண்டும் தொடர்ந்தார்.‘‘இந்தச் செயலை தெடர்வங்கும்முன், முதலில், நம் நெற்களஞ்சியத்தின் கொள்முதல், மற்றும் கஜானாவின் கையிருப்புபற்றிய அறிக்கையை, இந்த சபை தெளிவாக எனக்கு தரவேண்டும். விவசாயத்திற்கான மராமத்துப்பணிகளும், குடிநீர் தேவைக்கான வேலைகளும் தடைப்படாது, பாதிப்படையாது தொடர்ந்திட வேண்டும்.

கோபுரப்பணியால், ஒருக்காலும் மக்களின் குறைதீர்க்கும் பணிகளில், அவர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைகளில், ஒருநாளும் சுணக்கம் ஏற்பட்டு விடக்கூடாது. என் மக்களைத்துயரம் சூழ்ந்திட, ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன்.’’‘‘திருப்பணிக்கான ஒரு குழுவை, நாளையபொழுதுக்குள், சபை முடிவு செய்ய வேண்டும். அந்தக் குழுவே, எவரெவர்க்குஎதுபொறுப்பு, எந்தெந்த இனத்தார்க்கு எதுபங்கு என்பதைத் தீர்மானிக்கவேண்டும்.’’‘‘அடுத்து, இந்தத்திருப்பணியில்,எல்லோரின் ஒருமித்த சிந்தனையும் எனக்கு முக்கியம். ஆதலால், நம் எல்லைக்கு உட்பட்ட எல்லா கிராமசபையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

அந்தந்த சபையினர், அவரவர் மக்களிடம், நம் எண்ணத்தை விளக்கமாகப் பேசி,மக்கள் எண்ணத்தை அறிக்கையாக, நமக்கு அனுப்பவேண்டும். அதன்பிறகே இந்தத் திட்டம், அடுத்தகட்டத்திற்கு நகரவேண்டும். இது என் கட்டளை. இப்பணிகள் முழுமையையும், என் அரசிகள் மேற்பார்வையிட வேண்டும். இது என் வேண்டுகோள்.’’‘‘நமக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்களுக்கு, பிறகு தெரிவித்துக்கொள்ளலாம். எப்போது தெரிவிப்பதென்பதை, இப்பணிக்கான தேவைகள் தீர்மானிக்கட்டும், கூன்பிறை மதத்தார் குறித்தகவலை. இப்போதைக்கு தேவையில்லை.

வடக்கத்தார் நம்பக்கம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.வந்தால் இம்முறை, அவர்களுக்கு வேறுபாடம் எடுக்கப்படும் அந்த கூன்பிறையையே சூடாமணியாக, தன்சிரசில் சூடிக்கொண்ட ஈசனின் பணிதென்பதால், எதிரியின் கவலையற்று இருங்கள். கைலாயசபையில் பேசப்படப்போகிற இந்த செயலின் இறுதிவரைக்கும், அருணை ஈசன் நமக்கு துணையிருப்பான்.’’மூச்சுவாங்கப் பேசிய மன்னர் வீரவல்லாளன், மூத்தவர்களை வணங்கியபடி, மெல்ல சிம்மாசனத்தின் பின்பக்கம் சரிந்தார். யாரையோ திரும்பிப் பார்த்தார். அவர் குறிப்பறிந்து, ஏவலாள் கொண்டு வந்து தந்த, கருப்பட்டியிட்ட வெதுவெதுப்பான பானகநீரை அருந்தினார். அருந்திமுடித்ததும், சபையினரை நிமிர்ந்து பார்த்து, ‘‘சபை இத்தோடு களயலாம்’’ என்று முடித்தார்.

மன்னர் முடித்ததும், மௌனமாக இருந்தசபை, எழுந்துநின்று, ‘‘மன்னர் வீரவல்லாளர் வாழ்க. ஹோய்சால சிம்மம் வாழ்க வாழ்க’’ என தொடர்ச்சியாக வாழ்த்தொலி முழங்கியது. எல்லோரையும் வணங்கிவிட்டு, மன்னர், அரசியரோடு தன் ஓய்வறைக்கு கிளம்ப, வணங்கி வழிவிட்டது.மன்னர்தலை மறைந்ததும், மெல்லகளைந்து, இல்லம் திரும்பிய அனைவருக்குள்ளும், ‘‘நாமெல்லோரும் கைலாயம்விட்டு நகர்ந்து, இந்த அருணைக்கு விஜயம் செய்துள்ள சிவபூதகணங்கள்’’ என்ற மன்னரின் சொல் சுழன்றுகொண்டேயிருந்தது. மனதுக்குள் பழைய தலைநகரில், தாங்கள் முப்பொழுதும் தொழுது நின்ற  ஹோய்சாலேஸ்வரரின் பிரதிமைரூபம் தோன்றிக்கொண்டிருந்தது. காதுக்குள் கோயில் மணியோசை கேட்டுக்கொண்டேயிருந்தது. எல்லோரிடமும், கண்முன்னே நிகழ்கிற, ஒரு சிவதாண்டவத்தை கண்டு ரசிக்கிற, லயமான மனநிலையிருந்தது.

மறுநாளிலிருந்து அனைவரும் தீப்பிடித்ததுபோல வேலை செய்தார்கள். நெற்களஞ்சியக் கொள்முதல், தரவாக கணக்கெடுக்கப்பட்டது. அரசின் கஜானா கையிருப்பு, தெளிவாககு குறிப்பெடுக்கப்பட்டது. விவசாயத்திற்கான நீர்மேலாண்மை நிறைவுகுறித்து அறிக்கை, தயார் செய்யப்பட்டது.திருப்பணிக்கான ஏழுபேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. குழுவில் மன்னரின் மகன் விருபாக்ஷ வல்லாளன் பெயருமிருந்தது. குழுவின் தலைவராக, சிறுதெய்வங்களுக்கு பல திருப்பணிகள் செய்திருந்த படைத்தலைவர் மாதப்ப தண்டநாயக்கர் தீர்மானிக்கப்பட்டார்.

கட்டுமானப் பணிக்கான பாறைகளை தேடும்படி ஆட்கள் அனுப்பப்பட்டனர். பாறைகளைச் செதுக்கவும், சிற்பங்கள் செய்யவும், மல்லை சிற்பிகளுக்கும், உறையூர் ஸ்தபதிகளுக்கும், தகவல் தெரிவிக்கப்பட்டது. ‘‘எப்போது வேண்டுமானாலும் உத்தரவு வரலாம். தயாராக இருக்கவும்’’ என சொல்லப்பட்டது.எல்லா கிராமசபைகளுக்கும், மன்னரின் பேச்சு, செய்தியாக அனுப்பப்பட்டது. குறிப்பாக, ‘‘சிவபூதகணங்கள்’’ என்கிற மன்னரின் மேற்கோள், அடிக்கோடிட்டனுப்பப்பட்டது. ஊர்ததலையாரிகள், மக்களோடு கூடிப்பேசி. விரைவாகத் தகவலனுப்ப வேண்டுமென கட்டளையிடப்பட்டது. அத்தனையும் அரசிகளின் மேற்பார்வையின்படி நடந்தது.

மன்னரின் திருவோலை கிடைக்கப் பெற்ற எல்லா கிராமசபைகளும், ஊர்கோயிலின் மரத்தின்கீழ் கூடின. கூடியிருந்தவர்களை வணங்கிய தலையாரிகள், மன்னரின் எண்ணம் சுமந்து வந்த, பட்டுத்துணியாலான திருவோலையை, கண்ணில் ஒற்றிக்கொண்டு, உரத்தகுரலில் வாசித்துக்காட்டினர்.போரினாலும், தலைநகர்மாறிய அலைச்சலாலும், நொந்துபோயிருந்த மக்களுக்கு, மன்னரின் கோபுரத் திருப்பணி அறிவிப்பு, உற்சாகத்தைத் தந்தது. எல்லோரும் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்தனர். மரத்துப்பறவைகள் அதிர்ந்து, சடசடத்து பறக்கும்படி, ‘‘மாமன்னர் வாழ்க. ஹோய்சாலம் வாழ்க வாழ்க’’ எனக்கூவினர். ‘‘திருவண்ணாமலைத் தேவருக்கான இப்பணிக்கு, கடைசிவரை துணைநிற்போம். நமதுபங்காக உடலுழைப்பும், பொருளுதவியும் தயங்காது மன்னருக்குத்தருவோம்’’ என மொத்தமாக, வாக்கு தந்தனர்.

ஊர் தலையாரிகளால், எல்லாவிவரங்களும், அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டன. ‘‘இந்த தெய்வப்பணிக்கு எங்கள் பொறுப்பிது’’ என்று ஒவ்வொருகிராமமும் ஒன்றை எடுத்துக் கொண்டது. ‘‘பாறைகள் சுமக்கவும், பாரங்கள் ஏற்றி, இறக்கிடவும், நீருக்காக வண்டிமாடுகள் ஓட்டவும், அத்தியாவசியத் தேவைகளுக்காக அலையவும், சமையலுக்கான பொருட்களை அனுப்பவும், பணியாட்களுக்கு மொத்தமாக சமைக்கவும்’’ எந் தங்கள் பக்கமிருந்து ஆட்கள் அனுப்புவதாக வாக்குகள் தந்தது.தலையாரிகளின் பதில்களை கண்டு உற்சாகமான அரசவை, அத்தனையையும் மூத்த ராணியின் பார்வைக்கு கொண்டு போனது.

வந்த விவரங்களை கவனமுடன் உள்வாங்கிய மல்லமாதேவி, தன்தங்கையுடன் விவாதித்தார். மக்களின் ஆதரவிருப்பதை குறிப்பிட்டு மகிழ்ந்தார். ஒருமாலைப் பொழுதில் தங்கையோடு அரசரை சந்தித்து, அனைத்துத் தகவல்களையும் விவரித்தார்.அனைத்தையும் கூர்ந்து, பொறுமையாகக் கேட்டறிந்த மன்னர் வீரவல்லாளன், தன் எண்ணத்தை மக்கள் கொண்டாடுவதை கேட்டு, அகமகிழ்ந்தார்.

அந்த மகிழ்வோடு, புதிய குழுவில் இருப்பவர்களின் விவரங்கள், கேட்றிந்தார். அவர்களின் தனிப்பட்ட ஒழுக்கத்தை, வாழ்க்கை முறையை விசாரிக்கச் சொன்னார். ‘‘இவ்வளவு பெரியவேலைக்கு ஏழுபேர் கொண்டகுழு போதுமா’’ என கேள்வியெழுப்பினார். படைத்தளபதி மாதப்ப தண்டநாயக்கரை நியமித்த எண்ணத்தை பாராட்டினார். ஆனாலும், ‘‘ஏற்கனவே அவருக்கு வேலைப்பளு அதிகம். எதற்குமொரு முறை, அவரின் விருப்பம் கேட்டுக்கொள்ளுங்கள்’’ என்றார். குழுவிலிருந்த தன்மகன் பெயரை நீக்கிவிட்டு, வேறொருவரை நியமிக்கும்படி அறிவுறுத்தினார்.

(தொடரும்)

குமரன் லோகபிரியா

Related posts

திருச்செந்தூர் முருகன் அருளை பெற வழிபடும் முறை..!!

திரு இந்தளூர் பரிமள ரங்கநாதன்

சிதைவிலும் அழகு