மழையால் பாதித்த 5 மாவட்ட வணிகர்கள் ஜிஎஸ்டிஆர்-3 பி தாக்கல் செய்ய 10ம் தேதி வரை கால அவகாசம்: வணிக வரித்துறை செயலாளர் அறிவிப்பு

சென்னை: மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் ஜிஎஸ்டிஆர்-3 பி படிவம் தாக்கல் செய்ய காலஅவகாசம் வரும் 10ம் தேதி வரை நீட்டிப்பு செய்து வணகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த அதி கனமழையின் கடுமையான பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான விரிவான நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களில் முதன்மை வணிக இடங்களை கொண்டுள்ள வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகள், 2017ன் கீழ் நவம்பர் 2023 மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3 பி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டிய உரிய நாளினை கடந்த டிசம்பர் 20ல் இருந்து வரும் 10ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வருவாய் மாவட்டங்களில் உள்ள வணிகர்கள், நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3 பி படிவத்தை நீட்டிக்கப்பட்ட வரும் 10ம் தேதி வரை தாக்கல் செய்வதற்கு தாமத கட்டணம் மற்றும் வட்டி செலுத்த வேண்டியதில்லை. மேலும், அதிகனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களில் முதன்மை வணிகயிடங்களைக் கொண்டுள்ள வணிகர்கள் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகள், 2017ன் கீழ் 2022-23 நிதியாண்டிற்கான படிவம் ஜிஎஸ்டிஆர்-9 மற்றும் படிவம் ஜிஎஸ்டிஆர்-9சி ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டிய உரிய நாள் கடந்த டிசம்பர் 31ல் இருந்து வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் ஜூலை 15ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விசாரணைக்கு ஆஜர்

இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது: சீமான் பேட்டி