மழை காரணமாக சேலத்தில் 50 சதவீத சாலைகள் ‘டேமேஜ்’-சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சேலம் : தொடர் மழை காரணமாக சேலம் மாநகர், மாவட்ட பகுதிகளில் 50 சதவீதம் சாலைகள் பழுதடைந்துள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாநகர பகுதியில் மட்டும் 9லட்சத்திற்கும் மேற்பட்டவர் வசிக்கின்றனர். சேலம் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்டது. நகராட்சியாக இருந்தபோது சேலம் பகுதியில் சாலைகள் உருவாக்கப்பட்டது.

அப்போது வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 30 ஆண்டில் மக்கள் பெருக்கம், வாகனங்களில் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப சாலைகள் மேம்படுத்தப்படவில்லை.50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சாலைகளில் தான் இன்றும் வாகனங்கள் பயணித்து வருகின்றன. ஒரு புறம் மக்கள் பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சாலை ஆக்ரமிப்பாளர்களால் சாலையில் செல்பவர்கள் தினசரி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சேலம் மாநகர பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இச்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலத்தை கணக்கில் கொண்டு பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது: சேலம் மாநகராட்சியில் கடந்த 2007ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக சேலம் மாநகர முழுக்க குழாய்கள் அமைக்க குழித்தோண்டப்பட்டது. இவ்வாறு குழிகள் தோண்டப்பட்ட இடங்களில் இன்னும் பல இடங்களில் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இச்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாநகர பகுதியை பொருத்தமட்டில் அம்மாப்பேட்டை, குகை, களரம்பட்டி, கருங்கல்பட்டி, தாதகாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதியாகும். அம்மாப்பேட்டை, திருச்சி மெயின் ரோட்டில் எப்போது போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக குழிதோண்டப்பட்டது. இவ்வாறு தோண்டப்பட்ட இடங்களில் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. பொதுமக்களின் பலகட்ட போராட்டத்திற்கு ஆங்காங்கே பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டது. தற்போது அம்மாப்பேட்டை மிலிடெரி ரோடு மணல் மார்க்கெட் பகுதியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இச்சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

அயோத்தியாப்பட்டணத்தில் இருந்தும் வரும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அம்மாப்பேட்டை மெயின் ரோடு வழியாக வந்து கலெக்டர் அலுவலகம் வழியாக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்கிறது. இவ்வழியாக டவுன் பஸ், நெடுந்தூரம் பஸ்கள் செல்வதால் அம்மாப்பேட்டை காமராஜர் வளைவில் இருந்து பட்டைகோயில் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பால் பின்னால் செல்பவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சில இடங்களில் இரண்டு அடி ஆழத்திற்கு குழி ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பயணிக்க முடியாத அளவில் சாலை உள்ளது.

இதேபோல் கிச்சிப்பாளையம், களரம்பட்டி, கருங்கல்பட்டி, கருவாட்டு பாலம், நாராயணநகர், பச்சப்பட்டி உள்பட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சேலம் மாநகர், மாவட்ட பகுதிகளில் 50 சதவீதம் சாலைகள் பழுதடைந்துள்ளது. இவ்வாறு பழுதான சாலைகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வாகன ஓட்டிகள் கூறினர்.

Related posts

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2060-ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐநா

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு