மழையால் வனப்பகுதியில் வறட்சி நீங்கியது


கோவை: கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளூவாம்பட்டி உள்பட 7 வனச்சரங்கள் உள்ளது. இந்த வனத்தில் யானை, புலி, கரடி, காட்டுமாடு, சிறுத்தை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் என சுமார் 100 நாட்களுக்கு மேல் மழை பெய்யவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த கடுமையான வெயிலின் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள், குளம், குட்டைகள் வறண்டு போனது. மரங்களில் இருந்த இலைகள் காய்ந்து உதிர்ந்தது. மேலும், மரங்களில் இலைகள் இல்லாமல் எலும்பு கூடு போல் காட்சியளித்தது. வனத்தில் காட்டுத்தீ பரவும் அபாயம் இருந்து வந்தது. தவிர, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் அருகேயுள்ள கிராமங்களில் படையெடுத்தன. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக வனப்பகுதியில் கடந்த நூறு நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த கடுமையான வறட்சி நீங்கியுள்ளது.

வன ஓடைகள், ஆறுகள், குட்டைகள் மற்றும் மலைப்பகுதியில் உள்ள ஊற்றுகளில் தண்ணீர் வரத்து உள்ளது. மேலும், காய்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளித்த மரங்களில் தற்போது இலைகள் வரத்துவங்கி உள்ளது. காய்ந்து கிடந்த வனப்பகுதி பசுமையாக மாறியுள்ளது. இதனால் காட்டுத்தீ அபாயம் நீங்கியுள்ளது. வனத்தில் நீடித்து வந்த வறட்சி முழுமையாக நீங்கி இருப்பதால், வனத்தில் இருந்து வனவிலங்குகள் வெளியேறும் நிகழ்வுகள் குறைந்து இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி