நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அலங்காநல்லூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து தனது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக சாத்தியார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சிறுமலை, வகுத்து மலை, செம்போத்துகரடு ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் சாத்தியார் அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் முதல் அனைக்கு அதிக அளவில் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒரே நாளில் சாத்தியார் அணையின் நீர்மட்டம் இரண்டு அடி உயர்ந்துள்ளது. இதேபோல் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தால் ஒரு வாரத்திற்குள் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் பெய்த பருவமழை காரணமாக அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்னும் ஒரு சில தினங்களில் நிரம்பி மறுநாள் பாயக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அணையை நம்பியுள்ள 10 கண்மாய்கள் பாசன வசதி பெறும். மேலும் 2500 ஏக்கரில் நெல், கரும்பு, வாழை, மக்காச்சோளம், கம்பு, கேப்பை உள்ளிட்ட தானிய விவசாயமும் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1 கோடியில் ஷட்டர்கள் புதுப்பிப்பு: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.45 லட்சத்தில் பொருத்தப்பட்ட ஷட்டர் பழுது ஏற்பட்டு அணையில் நிரம்பிய தண்ணீர் ஷட்டரில் ஏற்பட்ட ஓட்டை வழியே வெளியேறி வீணாகி வந்தது. இதனை சரி செய்ய வலியுறுத்தி சாத்தியார் பகுதி பாசன விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறைக்கும் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் வெங்கடேசன் எம்எல்ஏ ஆகியோருக்கும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இந்த ஆண்டு சுமார் ரூ.1 கோடி மதிப்பில் அணையின் மதகுகள் புதுப்பிக்கப்பட்டது. மேலும் மதகுகளை நிலை நிறுத்தக்கூடிய மின் தூக்கிகள் உள்ளிட்ட அனைத்தும் புதுப்பொலிவு பெற்றது. இதன் காரணமாக அணையில் தேங்கக் கூடிய தண்ணீர் வீணாகாமல் பாசனத்திற்கு முழுமையாக பயன்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி