மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு குற்றாலம் மெயினருவியில் இரவில் தடை; காலையில் அனுமதி

* சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டியது

* அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்

தென்காசி: குற்றாலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் இரவில் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை நீர்வரத்து கட்டுக்குள் வந்ததால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.‌ இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் நேற்று முன்தினம் இரவு மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஐந்தருவியில் குளிக்க தடை விதித்தனர். மெயினருவியில் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை தண்ணீர் கட்டுக்குள் வந்ததை அடுத்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்‌. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது. இரவிலும் ஏராளமானோர் அருவிகளில் குளிக்கின்றனர். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் தற்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதாலும் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. நேற்று பகல் முழுவதும் வெயில் காணப்பட்டது. மாலையில் இதமான காற்று வீசியது. சாரல் இல்லை. ஆனாலும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாக குளித்து மகிழ்ந்தனர்.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி