மழைக்காலத்தில் பயிர்களைக் காக்கும் எளிய வழிகள்!

காலநிலை மாற்றத்தின் காரணத்தினால் இப்போது நினைத்த நேரத்தில் மழை பெய்கிறது. வெப்பக் காலங்களில் கூட அசுரக் காற்றுடன் மழை பொழிகிறது. இப்போது மழைக்காலம். சொல்லவா வேண்டும்? மழையின் காரணமாக மரங்கள், பல்வேறு வித பயிர்களின் செடி கொடிகள் அனைத்தும் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்படும். அதேபோல் வயல்களில் உரிய முறையில் பாத்தி எடுக்காத காரணத்தினால் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழியவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சரியான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம் மழை பொழியும் சமயங்களில் பயிர்களைப் பாதுகாக்கலாம். மழையில் இருந்து பயிர்களை பாதுகாக்க, பயிர்களை நடவு செய்யும்போதே தண்ணீர் தேங்காத வகையில் சரியான பாத்தி எடுத்து நடவு செய்வது அவசியம். அதேபோல் புடலை, பாகல், பீர்க்கன் உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் பந்தல் அமைத்து வளர்க்கக்கூடியவை. பந்தலில் கான்கிரீட் தூண்கள், சவுக்குக் குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படும். குச்சிப் பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிப் பயிர் செய்வோர் மண் அணைத்தும், வலுவிழந்த பகுதிகளில் கூடுதல் ஊன்றுகோல்கள் அமைத்தும் பந்தல் சாய்வதைத் தடுக்க வேண்டும்.

இவை அனைத்தையும் ஒரு மாதத்திற்கு ஒருமுறை பழுதாகாமல் இருக்கிறதா? என்று கவனித்து வர வேண்டும். பந்தலில் சணல், கம்பிகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படும். இவை அதிக பாரம் தாங்காது. மழை பெய்யும்போது பந்தலில் காய்ந்து தொங்கும் கொடிகளில் மழைநீர் விழும். அப்போது காய்ந்த சருகுகள் மழைநீரில் ஊறிவிடும். அதிகம் பாரம் தாங்காமல் பந்தல் அறுந்து விழுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம் இருக்கும். ஆகவே காய்ந்த தேவையற்ற கொடிகளை அவ்வப்போது அகற்றி கவாத்து செய்வது நல்லது. பெரும்பாலும் சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புகளைப் பயன்படுத்தி ஊன்றுகோல் அமைத்த பின்னர் பயிரிடுவது நல்லது.சூறைக்காற்றுடன் மழை பெய்யும்போது அதிகம் பாதிக்கப்படும் மரங்களில் தென்னையும் ஒன்று. தென்னையில் இளநீர், தேங்காய், அதிக தென்னை ஓலைகள் இருந்தால் சூறைக்காற்று வீசும் வேகத்தில், மரங்கள் சாய்வது மட்டுமில்லாமல் முறிந்து விழக்கூடும். ஆகவே தென்னையில் காய்ந்த ஓலைகள், முற்றிய ஓலைகளை வெட்டி அகற்றி விடவேண்டும். இந்த ஓலைகளை வெட்டும்போது இளம் ஓலைகள் பாதிப்படையாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டால் தென்னந்தோப்பிற்கு தண்ணீர் விடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மாமரம், பலாமரம், முந்திரி உள்ளிட்ட மரங்களில் இருக்கும் தேவையற்ற கிளைகளையும் வெட்டி அகற்ற வேண்டும். வாழைத்தோப்பைச் சுற்றி வாய்க்கால் எடுத்து, மழைநீர் தேங்காமல் வெளியேற, வழிவகை செய்ய வேண்டும். உரமிடுவதற்கு மரத்தைச் சுற்றி பாத்தி கட்டுதல் போன்ற பணிகளையும் தவிர்க்க வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டு சரியான முன்னெச்சரிக்கை எடுப்பதன் மூலம் பயிர்களைப் பாதுகாக்கலாம். தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களைப் பாதுகாக்க வேண்டும். கொய்யா, சீதா மற்றும் இதர பழப்பயிர்களில் கவாத்து செய்வதன் மூலம் மரத்தின் சுமையைக் குறைத்து மழை, புயல்காற்றில் இருந்து பயிர்களைப் பாதுகாக்கலாம். கத்தரி, வெண்டை, மிளகாய் போன்ற காய்கறிப் பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும். தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை மற்றும் கத்தரி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும். நோய்க்கிருமிகள் மழைநீரில் எளிதில் வயல்களில் பரவி பயிர்களைப் பாதிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும், பந்தல் வகை காய்கறிகளைத் தாக்கும் சாம்பல்நோய், அடிச்சாம்பல் நோய், தேமல் நோயும் அதிகரிக்கலாம். வாடல் நோய்த்தாக்கம், நூற்புழுத் தாக்கம்,

வெள்ளை ஈ, அசுவினி போன்ற சாறு உறிஞ்சி பூச்சிகளும் தாக்கத்தை ஏற்படுத்தும். பயிரில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க விதைக்கும் முன்பே விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.அதேபோல் செடிவகைப் பயிர்களுக்கு முடிந்தளவு இலைவழி உரமளித்து பயிரின் ஊட்டச்சத்துத் தேவையைப் பூர்த்தி செய்தல் வேண்டும். அதிகளவில் பயிரிடப்படும் வாழைப் பயிர்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். மரங்களைச் சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் மழைக்காலத்தில் நமது பயிர்களைக் காத்து வருமானம் பெருக்கலாம்.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.83 கோடி உண்டியல் காணிக்கை

3 சட்டங்களை ஆராய நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

இன்றைய நாள் எனக்கானது: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி