மழை குறைந்தும் தொடர்ந்து தண்ணீர் வரத்து; பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்வு: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் வரத்து தொடர்ந்து உள்ளதால் பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்திலிருந்து தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. இதன்காரணமாக, பிஏபி திட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இருப்பினும், கடந்த சில வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்திருந்தது. மேலும், சோலையார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பால், கடந்த சில வாரமாக அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் முதல் 3000 கனஅடி வரை இருந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்தது. தற்போதும் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை சற்று குறைவாக இருந்தாலும், பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 1400 கனஅடி தண்ணீர் வரத்து தொடர்ந்துள்ளது.

தற்போது, அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் முழு அடியையும் எட்டிவிடும் என்பதால், மெயின் மதகுகள் வழியாக தண்ணீர் பாய்ந்து செல்லும் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிஏபி திட்டத்திற்குட்பட்ட சோலையார், ஆழியார் அணைகளின் நீர்மட்டம் முழு அடியை எட்டிய நிலையில், அடுத்ததாக விரைவில் பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் முழு அடியை எட்ட உள்ளதால், பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு