மழைநீர் தேங்குவதால் மாணவிகள் அவதி; மாநகராட்சி பள்ளியை பெற்றோர் முற்றுகை: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளியில் உரிய வகுப்பறைகள் இல்லாததாலும், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதாலும் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, ஆசிரியர்கள், கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேக்குபேட்டை, கவரை தெரு பகுதியில் ராணி அண்ணாதுரை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, 17 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், 12 வகுப்பறைகள் மட்டுமே இப்பள்ளியில் உள்ளன.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக காஞ்சிபுரத்தில் கனமழை பெய்து வருவதால், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடும், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவது குறித்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சமாதானம் பேசுவதற்காக வந்த தலைமை ஆசிரியர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களிடம், பள்ளி மாணவிகளுக்கு உரிய வகுப்பறை வசதியில்லை.

ஏற்கனவே பள்ளிக்கு சொந்தமான வகுப்பறை கட்டிடங்கள் மாவட்ட கல்வி அலுவலகமாக பயன்படுத்த எடுத்துகொண்டதால், போதிய வகுப்பறை இன்றி ஒரே வகுப்பு அறையில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதையும் சுட்டி காட்டி பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளியின் வகுப்பறை பிரச்னை தீர உடனடியாக மாவட்ட கல்வி அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலகத்தை இரு வாரங்களுக்குள் இடமாற்றம் செய்து கொள்வதாகவும், பள்ளி வளாகத்தில் உள்ளே மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதையடுத்து பெற்றோர் சமரசமடைந்து திரும்பிச் சென்றனர். இதனையடுத்து, பள்ளி வளாகத்தில் இருந்த மழைநீரை மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்