மழைநீரை நிலைநிறுத்த சில மகத்தான தொழில்நுட்பங்கள்

“ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு, அண்ணாந்து பார்த்தால் தொன்னூறு முட்டைன்னு நாம் சின்ன வயசுல படிச்சிருக்கோம். அது உண்மைதாங்க. ஒரு தேங்காய் நெத்துல இருந்து நமக்கு வாழ்நாள் முழுக்க இளநியும், தேங்காயும் கிடைச்சிக்கிட்டே இருக்கும். இது நம்ம ஆரோக்கியத்துக்கும், சமையலுக்கும், பொருளாதாரத்துக்கும் எப்பவும் துணையிருக்கும்’’ என தென்னையின் மகத்துவத்தோடு பேச ஆரம்பித்தார் பொன்.காட்சிக்கண்ணன். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்.காட்சிக்கண்ணன். திராட்சை, தென்னை, கொக்கோ விவசாயத்தை எப்போதும் புதுமையாகவும், மற்றவர்களுக்கும் முன்மாதிரியாகவும் செய்து வரும் இவர் தனது 30 ஏக்கர் நிலத்தில் தென்னம்பிள்ளையை வைத்திருக்கிறார். அத்தனையும் நாட்டுத்தென்னை. இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இவர் கையாளும் சில யுக்திகள் தென்னைக்கு நல்ல வலுவூட்டி ஆயுளை அதிகப்படுத்துகிறது. அதன்மூலம் நிலையான வருமானமும் கிடைக்கிறது. இந்த விபரங்களை அறிந்துகொள்ள சுருளி அருவி பொங்கி வழியும் சுருளிப்பட்டிக்கு சென்றோம். சுற்றிலும் திராட்சைத் தோட்டங்கள். கம்பம் திராட்சை என்றால் பெரும்பாலும் இந்த சுருளிப்பட்டியில் விளையும் திராட்சையாகத்தான் இருக்கும். சுருளி அருவி நீரின் சுவை கலந்த திராட்சை அப்படி இனிக்கிறது. காட்சிக்கண்ணனின் வயலிலும் திராட்சைக் கொடிகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. இத்தகைய திராட்சைப் பந்தல்களுக்கு நடுவே கம்பீரமாக அமைந்திருக்கிறது அவரது தென்னந்தோப்பு. அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காட்சிக்கண்ணனைச் சந்தித்தோம். அப்போது தென்னை பராமரிப்பு குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“தென்னைக்கு ஆழக் குழியெடுப்பது அவசியம். இது மரம் நிலைத்து நிற்கவும், மழைநீரை உறிஞ்சவும் துணைபுரியும். நான் அப்படித்தான் குழியெடுத்து நடவு செஞ்சேன். இங்கு இருப்பது அனைத்துமே நாட்டு ரக கன்றுகள்தான். கடந்த 2005ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் சின்னப்பட்டுங்குற ஊருலருந்து கன்றுகளை வாங்கிட்டு வந்தேன். அந்தக் கன்றுகளை 26 X 26 அடி இடைவெளில நடவு செஞ்சேன். ஹிட்டாச்சி இயந்திரம் மூலமா மூன்றரை அடி ஆழம், மூன்றரை அடி அகலத்துல குழியெடுத்து கன்றுகளை வச்சோம். குழிக்குள்ள இருக்குற கன்றுகளுக்கும், மேல் தரைக்கும் 2 அடி இடைவெளி இருக்குற மாதிரி வெச்சேன். அதாவது கன்று ஒன்றரை அடி உயரம் வரைக்கும்தான் இருக்கும். அதுக்கும் மேல அடி காலியா கிடக்கும். இதனால் வேர் காற்று நல்லா குழிக்குள்ள போய்ட்டு வரும். செடிகள்ல நல்லா வேர் ஓடும். இந்தக் குழிகளை முறையா பராமரிச்சிட்டு வரணும். மரத்துல பாலை வரும் வரைக்கும் குழிகளை நல்லா பராமரிக்கணும். இதுக்கு நாங்க உழவெல்லாம் ஓட்டவில்லை. குழியை நன்றாக எடுத்தாலே போதும். அதுல நல்ல முறையில தொழுவுரம், மேலுரங்களைக் கொடுத்து வரணும். கன்று நடும்போது குழிக்குள்ள காட்டுக்குலைகளை அதாவது புதர்ச்செடிகளை வெட்டி வந்து போட்டுவிடுவோம். இது மட்கி செடிக்கு நல்ல உரமா மாறிடும். கன்று வச்சதும் உயிர்த்தண்ணி கொடுத்து, அதுக்கப்புறம் தினமும் பாசனம் பண்ணுவோம்.

3 வருசம் வரைக்கும் இதில ஊடுபயிர் பண்ணலாம். 3வது வருசத்துல இருந்து வருசத்துக்கு 2 முறை உழவு பண்ணுவோம். இதுல கோடை உழவு ரொம்ப அவசியம். கோடை உழவு செய்யும்போது மண்ணில் உள்ள நூற்புழுக்கள் சாகும். மழைநீர் நிலத்துல தேங்கி நின்னும் மரத்துக்கு சப்போர்ட் பண்ணும். மழைநீரை நிலைநிறுத்தி வைக்க இன்னொரு டெக்னிக்கை கடைபிடிக்கிறோம். அதாவது நிலத்துல அங்கங்க ரெண்டரை அடி ஆழம், 3 அடி அகலத்துல பள்ளம் தோண்டி, அதில தென்னைமரத்தோட தோகைளைப் (காய்ந்த மட்டைகள்) போடுவோம். அதேபோல தோகைகளை தென்னை மரத்தோட அடிப்பாகத்துலயும் போட்டு வைப்போம். இதுமாதிரி செய்யும்போது மழைநீர் பள்ளத்துல தேங்கி நிக்கும். தோகையில படுற மழைநீர் அதுல கலந்து, ஈரத்தை தக்க வைக்கும். தோகைகள் மக்கி உரமாவும் மாறும்.

மரத்துக்கு உரம் வைக்குறதுக்கும் ஒரு டெக்னிக்கை பயன்படுத்துவோம். அதாவது மரத்தைச் சுத்தி வட்டமா குழியெடுத்து, அதுல அரை வட்டத்துக்கு உரம் வைப்போம். அடிப்பகுதியில டிஏபி அரை கிலோ, யூரியா அரை கிலோ, பொட்டாஷ் அரை கிலோ, வேப்பம்புண்ணாக்கு அரை கிலோன்னு கலந்து போடுவோம். அது மேல தொழுவுரத்தைப் போடுவோம். இந்த உரங்களை வச்சதுல இருந்து 6 மாசம் கழிச்சி, இன்னொரு அரை வட்டத்துல உரம் வைப்போம். இது மாதிரி மாத்தி மாத்தி, வருசத்துக்கு 2 தடவை உரம் வைப்போம். தண்ணி வைக்கும்போது உரங்கள் மரத்துக்கு முழுசா போய்ச் சேர்ந்துடும். இதனால் உரத்தின் அளவு கம்மியாகுது. சீரான அளவுலயும் கொடுக்க முடியுது. நோய்கள், பூச்சிகள் வந்தால் அதுக்கேத்த மாதிரி மருந்து கொடுப்போம். இதுபோல நல்லா கவனிச்சிக்கிட்டு வந்தா 6வது வருசத்துல இருந்து காய் வெட்டலாம். நாங்க 2 வருசம் இளநீர் மட்டும் வெட்டுவோம். 8 வருசத்துக்குப் பிறகு தேங்காயை வெட்ட ஆரம்பிப்போம். நாங்க நல்லா பராமரிச்சிட்டு வர்றதால 50-லிருந்து 60 நாளுக்கு ஒருமுறை தேங்காய் வெட்டுறோம். ஒரு வெட்டுக்கு ஒரு ஏக்கருக்கு ஆயிரத்தில் இருந்து 1500 காய்கள் வரை கிடைக்கும். சராசரியா 1300 காய் கிடைக்கும். சராசரியா ஒரு காய்க்கு 12 ரூபாய் விலை கிடைக்குது. இதன்மூலமா 15,600 ரூபாய் வருமானம் கிடைக்கும். வருசத்துக்கு எப்படியும் 6 முறை தேங்காய் வெட்டுவோம். இதன்மூலமா 93,600 ரூபாய் வருமானாமா கிடைக்குது. இதுல பாதிக்கு பாதி செலவாகும். 50 ஆயிரம் போனாலும் 43,600 லாபமா கிடைக்கும். 30 ஏக்கருக்கு 13 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
பொன்.காட்சிக்கண்ணன்:
– 97872 92101.

தேங்காய் எண்ணெய்

பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என பல விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. பொன்.காட்சிக்கண்ணனும் இதையே வலியுறுத்துகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ தற்போது ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்கப்படுவதன் மூலம் அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகள்தான் பயன் அடைகின்றன. பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்தால் நம் நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கும். இதன்மூலம் நமது மக்களின் ஆரோக்கியம் காக்கப்படும். நமது நாட்டின் பொருளாதாரமும் மேம்படும். இதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளை ஆராய வேண்டும். மேலும் தற்போது பல இடங்களில் தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. சரியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் விரக்தி அடைகிறார்கள். இந்த சமயத்தில் தேங்காய் எண்ணெயை விநியோகம் செய்தால் தென்னை மரங்கள் காக்கப்படும்’’ என்கிறார்.

Related posts

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்

சென்னை சிபிஐ அலுவலகத்தில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டார் பொன்மாணிக்கவேல்

கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்: பட்டியலின மக்கள் சாமி தரிசனம்