தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற தாழ்வு மண்டலமானது நேற்று நள்ளிரவு கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் வருகிற 6ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதியில் விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திர பிரதேசம்) கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், கலிங்கப்பட்டினத்திற்கு (ஆந்திர பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், கோபால்பூர் (ஒடிசா) தெற்கு- தென்மேற்காக 180 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது மேலும், வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, விசாகப்பட்டினம்- கோபால்பூர் இடையே கலிங்கப்பட்டினத்திற்கு அருகில் நேற்று (ஆக.31) நள்ளிரவு கரையை கடந்தது. இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வடதமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும் வருகிற 6ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்