தமிழ்நாட்டில் 25ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 25ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கத்திரி வெயில் 29ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி அளவில் இருந்தது. கன்னியாகுமரி, சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. சென்னை மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை குறைவாக இருந்தது. மாவட்டங்களை பொறுத்தவரையில் மதுரை மற்றும் மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி, திருவண்ணாமலை 103 டிகிரி, வெயில் நிலவியது. வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை, திருத்தணி, நாகப்பட்டினத்தில் 99 டிகிரி வெயில் நிலவியது.

மேலும், வெப்ப சலனம் காரணமாக நீலகிரி,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. இதையடுத்து, தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 25ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி வரை இருக்கும். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் நேற்றுவரையிலான வானிலை நிகழ்வுகளின் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 182 மிமீ மழை பெய்துள்ளது. இது 73 சதவீதம் கூடுதல்.

Related posts

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை