மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த மே 30 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் அதிகமாக மழை கிடைக்கும் கேரளா, கர்நாடகாவில் இந்த முறை குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. வடமாநிலங்களிலும் கடந்த வாரம் வரை மழை தொடங்காமல், கடும் வெயில் வாட்டி வதைத்தது.

சில நாட்களுக்கு முன்புதான் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக பரவியது. தற்போது தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை 109 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 50 மி.மீ. அளவு மழை மட்டுமே கிடைக்கும். இதன்மூலம் வழக்கத்தைவிட கடந்த மாதம் 115 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு