நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை; புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கொட்டுது தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பகுதியில் மழை இல்லாததால் கடந்த சில நாட்களாக அருவி தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு என்ற இடத்தில் இருந்து சுமார் 300 அடி தூரத்தில் இந்த அருவி உள்ளது. இந்த அருவி விழும் பகுதி 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும். மலைப்பகுதிகளில் நீண்ட தூரம் ஆறாக பயணித்து இந்த இடத்தில் அருவியாக பாய்கின்றது. தற்போது, இம்மலைப்பகுதியில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த அருவியில் விழும் தண்ணீர் அதிகரிப்பின் காரணமாக குடகனாறு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல்லுக்கு குடிநீர் ஆதாரமான காமராஜர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்த அருவிக்கு செல்லும் பாதை மிகவும் ஆபத்தானதாகவும், பள்ளத்தாக்கு நிறைந்த பகுதியாகவும் அமைந்துள்ளதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி தவறி விழுந்து பலியாவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வனத்துறை சார்பில் அருவியின் நுழைவு பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த பலகை தற்போது காணவில்லை. இதனால் தற்போது அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை பலகை இல்லாததால் ஆபத்தான இடங்களில் குளிக்கும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, மீண்டும் அருவி பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்து உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது வழக்கு..!!

சென்னை – காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ’ ரயில் இன்று சோதனை ஓட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுப்பு