26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; நீலகிரி, கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு 2 நாட்கள் முன்னதாக மே 30 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் வெளுத்து வாங்கிய மழை பின்னர் சற்று ஓய்வு எடுத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தென்மேற்கு பருவமழை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழகத்தை பொருத்தவரை கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 26ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடலில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு