மழைக்கால நோய்களில் இருந்து கால்நடைகளைக் காப்போம்!

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி, தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த சமயத்தில் மனிதர்களைப் போல கால்நடைகளையும் சில நோய்கள் தாக்கி இழப்பை ஏற்படுத்தும். மழைக்காலத்தில் கால்நடைகளைத் தாக்கும் சில நோய்கள், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சில சமயங்களில் உயிரிழப்புக்குக் கூட கொண்டு செல்லும். இதனால் இந்த சமயங்களில் கால்நடைகளை நோய்களில் இருந்து காப்பது மிகவும் அவசியம். நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்க, நோய்க்கான அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை விவசாயிகள் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம்.

தொண்டை அடைப்பான்

இந்நோய் பெரும்பாலும் மழைக்காலத்தில், குறிப்பாக நீர்ப்பாசனம், வெள்ளப்பெருக்கு மிகுதியாக உள்ள பகுதிகளில் காணப்படுகிறது. கறவை மாடுகள் குறிப்பாக எருமை மாடுகள், இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. தூரப்பயணத்திற்குப் பின்பும், அதிக குளிர் மற்றும் மழையின் பாதிப்பிற்கு பின்பும் இந்நோய் ஏற்படுகிறது. இதனால் கலப்பினப் பசுக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.

நோய்க்கான அறிகுறிகள்

* கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
*கண்கள் சிவந்து வீங்கிக் காணப்படும்.
* தலை, கழுத்து, தொண்டை, மார்பு போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படும். வீக்கம் சூடாகவும், வலியோடு கூடியதாகவும் இருக்கும்.
*குடற்பகுதி பாதிக்கப்பட்டால் வயிற்றுப் போக்கு காணப்படும். சாணம் இளகி இரத்தம் கலந்திருக்கும்.
*நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படும்.
*வாயிலிருந்து மிகுதியான உமிழ்நீரும் வழிந்து கொண்டிருக்கும். நாக்கு தடித்துக் கருப்பாகி விடும்.
*மாடுகள் எதையும் விழுங்கவும், மூச்சு விடவும் முடியாமல் திணறும்.தடுப்பும், பாதுகாப்பும்:
*எல்லா மாடுகளுக்கும் மழைக்காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தடுப்பூசி போடவேண்டும்.
*நோயுற்ற மாடுகளை உடனடியாக மற்ற மாடுகளிடம் இருந்து பிரித்து, தகுந்த மருத்துவம் செய்து பாதுகாக்க வேண்டும்.
3. பொதுச் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். தொடக்க நிலையில் தகுந்த மருத்துவம் செய்வதால், பாதிக்கப்பட்ட மாடுகளைக் காப்பாற்றி விடலாம்.

சப்பை நோய்

இந்நோய் வெப்பம் அதிகமாகவும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாகவும் உள்ள பகுதிகளிலுள்ள மாடுகளை அதிகளவில் பாதிக்கிறது. இதுவும் ஓர் மழைக்கால நோய்தான். நல்ல ஆரோக்கியமான, திடமான இளம் கன்றுகளை 6 மாத வயது முதல் 3 ஆண்டு வயது வரை அதிகம் பாதிக்கிறது. இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படுகிறது.

நோய்க்கான அறிகுறிகள்

திடீரென்று கடுமையான காய்ச்சல் ஏற்படும். தொடை அல்லது முன்கால் சப்பையிலோ அல்லது கழுத்து போன்ற சதைப்பிடிப்புள்ள பகுதிகளிலோ வெப்பம் மிகுதியாக இருக்கும். வலியோடு கடினமான தன்மையுள்ள பெருத்த வீக்கம் காணப்படும். இதன் காரணமாக மாடுகள் நடக்க முடியாமல் சிரமப்படும். அதன்பிறகு வீக்கம் குறைந்து, வலியற்று, வீக்கத்திற்குள் காற்று இருப்பதாலும், விரல் கொண்டு அழுத்தும்போது நறநறவென்ற சத்தம் வரும். வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்திலுள்ள தோலின் நிறம் கருப்பாக இருக்கும். நோய்க் கண்ட 48 மணி நேரத்தில் உடனடியாக மருத்துவம் செய்யாமல் போனால், மாடுகள் இறந்து விடும்.

தடுப்பும் பாதுகாப்பும்

மழைக்காலத்திற்கு சுமார் 1 மாதத்திற்கு முன்பே ஒவ்வொரு ஆண்டும் மாடுகளுக்குத் தடுப்பூசி போடவேண்டும். நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் மாட்டைப் பிரித்துத் தனியாக ஒதுக்குப்புறமாக வைத்துக் கண்காணிக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடனடியாக மருத்துவம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மாட்டை உறுதியாகக் காப்பாற்றிவிடலாம். சிகிச்சை அளிக்காவிட்டால் நோய்க்கண்ட மாடுகள் 5-7 நாட்களில் இறந்துவிடும். இறந்த மாடுகளைச் சுகாதார முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். இறந்த இடத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

கன்றுக் கழிச்சல் நோய்

இந்நோய், இளங்கன்றுகளைத் தாக்கி அதிக அளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோய் கோலிபார்ம் என்ற கிருமியால் ஏற்படுகிறது. குடற்பகுதியில் உள்ள மற்ற பாக்டீரியா நுண்கிருமிகள் இவற்றுடன் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கன்று ஈன்ற ஓரிரு வாரங்களில் இந்நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படும். சீம்பால் கொடுக்கப்படவில்லை என்றால் கன்றுக் கழிச்சல் அதிகமாக ஏற்படும். அசுத்தமான தண்ணீர், மோசமான சுற்றுப்புறச் சுகாதாரம், அதிக அளவு பால் கொடுத்தல் போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது.

நோய்க்கான அறிகுறிகள்

வெள்ளை நிறத்தில் வயிற்றுப் போக்கு தொடர்ந்து இருக்கும். கன்றுகள் மெலிந்து காணப்படும். நோய்க் கண்ட ஒரு வாரத்தில் கன்று இறந்துவிடும்.

தடுப்பும் பாதுகாப்பும்

கன்று பிறந்தவுடன் மடியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சீம்பால் அருந்த விடவேண்டும். அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக அருந்த அனுமதிக்க வேண்டும்.உடல் எடையில் 10 சதம் பசும்பால் கொடுக்க வேண்டும். இதில் 10 விழுக்காடு சீம்பாலாகத் தரலாம். தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டி மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். தரை எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும். முதல் இரண்டு வாரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. இல்லையேல் குளோரின் கலந்த தண்ணீரைக் கொடுக்க வேண்டும். நோயுற்ற கன்றுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்.

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்