மழை பொய்த்து விட்டதால் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாமல் இருப்பதால், காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியவில்லை. நெருக்கடி காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கர்நாடகா-தமிழ்நாடு அரசுகள் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இது குறித்து மைசூரு மாநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள மாவட்டங்கள் மட்டுமில்லாமல் பக்கத்து மாநிலமான கேரள மாநிலத்திலும் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள நான்கு அணைகளும் நிரம்பாமல் உள்ளது. அதன் காரணமாக நடுவர் மன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியவில்லை. உபரி நீர் திறப்பதிலும் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழை பொய்த்து போகும் கஷ்ட காலத்தில் எப்படி தண்ணீர் பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலை இரு மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் அம்மாநில விவசாயிகள் நடுவர் மன்ற உத்தரவுபடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு நீர்ப்பாசன அமைச்சர் உச்சநீதிமன்றத்தை நாடுவதாக தெரிவித்துள்ளதாக பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்ககூடாது என்பது அரசின் நோக்கமில்லை. இல்லாத நிலையில் எப்படி தண்ணீ்ர் திறக்க முடியும். காவிரி விஷயத்தில் கர்நாடக மாநில விவசாயிகள் நலனுக்கு மட்டுமே நாம் முன்னுரிமை கொடுக்க முடியும்’ என்றார்.

Related posts

கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி போலீஸ் ஏட்டு மெகா மோசடி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: பரபரப்பு தகவல்கள்

இஸ்ரேலின் இன அழித்தலுக்கு மோடி அரசு ஆதரவு: முத்தரசன் குற்றச்சாட்டு

பூரண மதுவிலக்கு என்பது எங்களது லட்சியம் படிப்படியாக கடைகள் குறைப்பது நிச்சயம்: அமைச்சர் ரகுபதி உறுதி