ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்தனர் கோடாரி, கற்களால் சரமாரி தாக்கிய 3 பேர் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

*ஒருவர் காலில் தோட்டா பாய்ந்தது

*ஐதராபாத்தில் நள்ளிரவு பரபரப்பு

திருமலை : ஐதராபாத் நம்பள்ளி ரயில் நிலையம் அருகே நள்ளிரவில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்தவர்களை விசாரித்தபோது, கோடாரியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காலில் தோட்டா பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நம்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ரயில் நிலையம் அருகே சந்தேகம்படும்படி 3 நபர்கள் சென்றனர். அவர்களை பிடித்து விசாரிக்க முயன்றபோது அதில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கோடாரியால் போலீசாரை தாக்கியதோடு மற்ற இருவர் கற்களால் சரமாரி தாக்கியபடி தப்பி செல்ல முயன்றனர். இதனால் போலீசார் சுதாரித்துக்கொண்டு தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் போலீசாரை தாக்கிய ஐதரபாத் மாங்கர் பஸ்தியை சேர்ந்த ராஜு என்பவரின் வலது கால் தொடையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்து அவரது உடலில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. மற்றொரு குற்றவாளியான அகபுராவை சேர்ந்த ஐயனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொருவர் தப்பி ஓடிய நிலையில் அவர்கள் யார்? அந்த நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் என்ன செய்து கொண்டிருந்தார்கள், கோடாரிகளுடன் இவர்கள் எதற்காக சுற்றி வந்தார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடியவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த மூவரும் கொள்ளை கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பள்ளிக்கு சென்றபோது வழிமறித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

தாயை தரக்குறைவாக பேசியதால் தந்தையை அடித்து கொன்ற மகன்: எர்ணாவூரில் பரபரப்பு

தொடர்ந்து 9வது முறையாக குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி மாற்றமில்லை