ஒழுகினசேரி பாலத்தில் ரயில்வே நிர்வாகம் முதல்கட்ட பணியை தொடங்கியது

*28ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் : கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரயில்வே பாலம் கட்டும் பணியும், இரட்டை ரயில் பாதைக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது. இந்த பணிக்காக ஒழுகினசேரியில் தற்போது உள்ள ரயில்வே பழைய பாலத்தை இடிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய பாலம் கட்டாமல், பழைய பாலத்தை இடிக்க கூடாது என்று மாநகராட்சி மேயர் மகேஷ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கலெக்டர் தரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதற்கிடையே இரட்டை ரயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணிக்காக, ஒழுகினசேரி கிராமம் பகுதியில் இருந்த வீடுகள், கட்டிடங்களை ஜேசிபி மூலம் இடிக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலத்தில் இருபுறமும் அமைக்கப்பட்டு இருந்த இருப்பு தடுப்பு வேலிகளில் ஒரு புறம் அகற்றப்பட்டு, மண் அகற்றும் பணி தொடங்கியது. இன்னும் இரண்டு நாட்கள் மண் அகற்றும் பணி நடக்கும். அதனை தொடர்ந்து சாலை மூடப்பட்டு இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி நடக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது: ரயில்வே நிர்வாகம் நாளைக்கு (28ம் தேதி) போக்குவரத்து நிறுத்த வேண்டும் என எழுத்து பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து 28ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனை தொடர்ந்து நெல்லை மார்க்கமாக செல்லும் வாகனங்கள், நாகர்கோவில் வரும் வாகனங்கள் அசம்புசாலை வழியாக இயக்கப்படும். என்றனர்.

Related posts

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே

விஷச் சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு – அரசு அறிக்கை

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது