ரயில் மோதி 3 பெண்கள் பலி: கேரளாவில் பரிதாபம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே ரயில் மோதி திருமண கோஷ்டியை சேர்ந்த 3 பெண்கள் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். கேரள மாநிலம் காஞ்சங்காடு அருகே உள்ள கள்ளார் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். அவரது மகன் ஜஸ்டின். அதேபோல் கோட்டயம் அருகே உள்ள சிங்கவனம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். அவரது மகள் மார்ஷா. ஜஸ்டின்-மார்ஷா திருமணம் நேற்று கள்ளார் பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் நடந்தது. இதற்காக மணமகளின் உறவினர்கள் 52 பேர் நேற்று கோட்டயத்தில் இருந்து காஞ்சங்காட்டுக்கு ரயிலில் வந்தனர்.

திருமணம் முடிந்த பிறகு நேற்று இரவு அவர்கள் மங்களூரு-திருவனந்தபுரம் மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோட்டயத்திற்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். திருமணத்திற்குப் பிறகு அனைவரும் காஞ்சங்காடு ரயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் ரயில் ஏறுவதற்காக 2வது பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தை கடந்து முதல் பிளாட்பாரத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது கோவையில் இருந்து ஹிசாருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதிவிட்டு சென்றது. இதில் மணமகளின் உறவினர்களான சிங்கவனம் பகுதியைச் சேர்ந்த சின்னம்மா உதுப்பாய் (72), ஆலிஸ் தாமஸ் (61), ஏஞ்சலினா ஆபிரகாம் (30) ஆகிய 3 பெண்கள் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். இறந்தவர்கள் உடல் பாகங்கள் சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த ரயில் கண்ணூருக்கு அடுத்து மங்களூரு ரயில் நிலையத்தில் தான் நிற்கும். மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்தும் இறந்தவர்களின் சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள் உடனடியாக காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து காஞ்சங்காடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்