போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க ஊசியை விழுங்கிய ரவுடி

பெரம்பூர்: போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க ஊசியை விழுங்கிய சரித்திர பதிவேடு ரவுடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரம்பூர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (எ) மாட்டு தினேஷ் (30). இவர் மீது திருவிக நகர், பெரவள்ளூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சில குற்ற வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு ரவுடியாகவும் உள்ளார். நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் சிவசக்தி நகர் 2வது தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்ற தினேஷ் அங்கு தங்கியுள்ளார்.

அவரது பாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ஊசியை விழுங்கிவிட்டதாகக் கூறி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் நேற்று காலை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் செம்பியம் காவல் நிலைய போலீசார் தன்னை தேடி வருவதாகவும், அவர்கள் தன்னை பிடித்து விடுவார்கள் என்று நினைத்து போதையில் ஊசியை விழுங்கி விட்டதாகவும் தினேஷ் கூறியுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு