கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது: கொட்டும் மழையில் ராகுல்காந்தி உரை

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலபுர்கியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கொட்டும் மழையில் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகா மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. கர்நாடக அரசில் 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அந்தப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். மேலும், கர்நாடகத்தில் சிறப்புக் கல்விக் கொள்கை கொண்டுவரப்படும். அதன்மூலம், ஐஐடி-க்கள், ஐஐஎம்-கள் ஆகியவை இங்கு கொண்டுவரப்படும். கர்நாடகாவில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் மூலம் அந்த கிராமம் வளர்ச்சி காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஜகவுக்கு 40 (% கமிஷன்) பிடிக்கும் என்பதால், கர்நாடக மக்கள் அக்கட்சிக்கு 40 தொகுதிகளில் வெற்றியை தருவார்கள். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் ராகுல் நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்