ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் எதிரொலி பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் புகார் மனு

திருவள்ளூர்: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை அவதூறாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்த பாஜ பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி ரா.சீனிவாச பெருமாளிடம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைசந்திரசேகர் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, எதிர் காட்சி தலைவர் ராகுல்காந்தியை நாட்டின் நம்பர் ஒன் பயங்கரவாதி என்று பேசியுள்ளார். மேலும் அவர் ராகுல் காந்திக்கு எதிராக பொதுமக்களின் வெறுப்பையும், சீற்றத்தையும் தூண்டும் வகையில் வன்முறை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. மேலும் அவர் ராகுல் காந்தியை படுகொலை செய்ய வேண்டும் அல்லது உடலில் காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி குறித்து இத்தகைய பேச்சுக்கள் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கத்திலும், வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலம் கலவரம், அமைதிக்கு குந்தகம் போன்றவற்றை தூண்டிவிடும் வகையில் அமைகிறது. எனவே இது சம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

அப்போது மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், ஒய்.அஸ்வின் குமார் மாவட்ட முதன்மை துணைத் தலைவர் தளபதி மூர்த்தி, மாவட்ட பொருளாளர் மணவாளன், நகரத் தலைவர் ஜே.ஜோஷி பிரேம் ஆனந்த், மாவட்ட பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் இ.கே.ரமேஷ், தியாகு, பாரதி, ஏ.அருள், ஸ்டாலின், வட்டாரத் தலைவர்கள் கலை, நகர செயலாளர் பாலாஜி, சீனிவாசன், திருத்தணி நகர பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

ஆவடி: பாஜ பொறுப்பாளர் எச்.ராஜா, ஒன்றிய ரயில்வே இணைய அமைச்சர் ரவணிக்பிட், உத்திரபிரதேசம் மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மகாராஷ்டிரா மாநில எம்எல்ஏ சஞ்சய் கேய்க்வாட், பாஜ தலைவர் தர்வேந்திர சிங் ஆகியோர் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை அவதூறாக பேசியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஆலோசனையின்படி,

திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் ஆர்.எம்.தாஸ் ஆணைக்கிணங்க திருவள்ளூர் தெற்கு வட்டாரத் தலைவர் பி.பொன்ராஜ் தலைமையில் மாவட்ட மூத்த துணைத்தலைவர் சதா.பாஸ்கரன் முன்னிலையில், மாவட்ட துணைத் தலைவர் வேப்பம்பட்டு கே.ஆர்.அன்பழகன், மாவட்ட பொருளாளர் களம்பாக்கம் எம்.சிவக்குமார், மாவட்ட செயலாளர் டி.ராஜ்குமார், வட்டார செயலாளர் வரதராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டர் பலராமனிடம் புகார் கொடுத்தனர்.

திருத்தணி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜவைச் சேர்ந்த ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு மற்றும் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி, திருத்தணி நகர காங்கிரஸ் தலைவர் டி.எம்.ராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் ராசி ராஜேந்திரன், வட்டார தலைவர் இப்ராஹிம் ஆகியோர் திருத்தணி காவல் நிலையில் புகார் மனு வழங்கினர்.

ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மாதவி ராஜா தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. முன்னாள் வட்டார தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, கந்தன், துளசி, பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர். பொன்னேரி: திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஊடகத்துறை மாவட்ட தலைவர் முகமது தாரிக் மீஞ்சூர் காவல் நிலையத்தில் எஸ்ஐ செல்வத்திடம் புகார் மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை உபி மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், கொலை மிரட்டல் விடுத்தும், அவதூறாகவும் பேசி வருகிறார். அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தது. அவருடன் மாவட்ட பொதுச் செயலாளர் முகமது அல்தாப், மீஞ்சூர் காங்கிரஸ் தலைவர் அரவிந்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

 

Related posts

குழப்பம் ஏற்படுத்தும் கருத்தை பேசிய நிர்வாகி மீது திருமாவளவன் நடவடிக்கை எடுப்பார்: ஆ.ராசா எம்பி பேட்டி

உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுக்காமல் தகராறு; குமரி அதிமுக நிர்வாகியை நிர்வாணமாக்கி தாக்கிய பெண்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நிரந்தரமாக நியமிக்க கோரி வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு