பணம் தர மறுத்ததால் ஆத்திரம் டாஸ்மாக் பார் ஊழியருக்கு அரிவாள் வெட்டு: 3 பேருக்கு போலீஸ் வலை

கூடுவாஞ்சேரி: பாண்டூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடை பார் ஊழியரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக 3 பேர் கொண்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (42). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர், கூடுவாஞ்சேரி அருகே உள்ள பாண்டூரில் தங்கி அரசு டாஸ்மாக் கடை பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் டாஸ்மாக் கடை அருகில் உள்ள பாருக்கு 3 பேர் வந்துள்ளனர். அப்போது, ராமச்சந்திரனிடம் அந்த மர்ம நபர்கள் பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில், பணம் தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள், அதில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து ராமச்சந்திரனின் தலை மற்றும் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் ராமச்சந்திரன் சரிந்து கீழே விழுந்தார். இவரின், அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திரனை மீட்டு பொத்தேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் கொண்டுபோய் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 3 பேர் கொண்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்