ரபேல் கொள்முதல் போல அமெரிக்காவின் டிரோன் ஒப்பந்தத்தில் ஊழல்?:பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

புதுடெல்லி: ரபேல் விமானத்தை போல அமெரிக்காவிடமிருந்து டிரோன் கொள்முதலிலும் ஊழல் நடப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா மற்ற நாடுகளை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாகவும், இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து நீண்ட தூரம் பயணித்து தாக்கும் திறன் கொண்ட 31 எம்க்யூ-9பி ஆளில்லா விமானங்களை (டிரோன்) வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான கொள்முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தில் அதிபர் பைடனுடனான சந்திப்பில் இந்த டிரோன் கொள்முதலை உறுதிபடுத்தினார்.

இதற்கிடையே, ரபேல் விமானங்களை போலவே அமெரிக்க டிரோனையும் இந்தியா அதிக விலை கொடுத்து வாங்குவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே குற்றம்சாட்டி இருந்தார். மற்ற நாடுகள் வாங்குவதை விட இந்தியா 3 மடங்கு அதிக விலை கொடுத்து டிரோன்களை வாங்குவதாக அவர் புள்ளிவிவரங்களுடன் பதிவிட்டிருந்தார். இதனை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. நேற்று விடுக்கப்பட்ட அறிக்கையில், ‘டிரோன் விலை மற்றும் கொள்முதல் விதிமுறைகள் குறித்து சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் ஊகத்தின் அடிப்படையிலானவை. அவை உண்மையில்லை. அவற்றை யாரும் பகிர வேண்டாம். 31 டிரோன்களின் விலை சுமார் ரூ.25 ஆயிரம் கோடி என அமெரிக்க அரசு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவிடம் இருந்து கொள்கை ஒப்புதல் பெறப்பட்ட பிறகு விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது மற்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட விலையை வைத்து இறுதி செய்யப்படும். இப்போதைக்கு எந்த விலையும் நிர்ணயம் செய்யப்படவில்லை’ என கூறப்பட்டுள்ளது.

Related posts

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு