ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: குத்தகை பாக்கி 730 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டீ.டீக்கராமன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பி.வில்சன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ெஜ.ரவீந்திரன், சிறப்பு அரசு பிளீடர் ஆ.செல்வேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பி.வில்சன் வாதிடும்போது, குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, நிலம் சுவாதீனமும் எடுக்கப்பட்டு விட்டதால், உடனடியாக நிவாரணம் கோர முடியாது.

பல தகவல்களை மறைத்து இடைக்கால நிவாரணம் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட அன்றே நிலம் சுவாதீனம் எடுக்கப்பட்டபோது எந்த போராட்டமும் இல்லாமல் சுவாதீனம் எடுக்கப்பட்டது என்று வாதிட்டனர். அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ரேஸ் கிளப் இடத்தில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டால் சென்னை மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும். அதனால்தான் அரசு சுவாதீனம் செய்த இடத்தை தோட்டக்கலை துறைக்கு மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எல். சோமயாஜி ஆஜராகி, குத்தகைக்கான காலம் முடிந்தாலும் முறையாக நோட்டீஸ் அளிக்காமல் காலி செய்ய வலியுறுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உரிய வாய்ப்பு தராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஸ் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மூலம் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வரி வருவாயாக அரசுக்கு கிடைக்கிறது என்று வாதிட்டார்.

குதிரை உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், கிளப் மூடப்பட்டால் அங்கு பணியாற்றி வரும் குதிரை பயிற்சியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அங்கு பணியாற்றி வரும் ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள் என கூறினார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்