Sunday, June 30, 2024
Home » ரேபீஸ்… தடுப்போம்… தவிர்ப்போம்!

ரேபீஸ்… தடுப்போம்… தவிர்ப்போம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

உலகில் ‘குணப்படுத்தவே முடியாது… நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்’ என்று கவலைப்படுவதற்கும் ஒரு நோய் இருக்கிறது என்றால், அது வெறிநாய்க்கடியால் வரும் ‘ரேபீஸ்’தான். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை இந்த நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். அதேவேளையில், இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிர் பிழைத்துவிடலாம் என்பதும் 100 சதவிகிதம் உண்மை.

*எது ரேபீஸ்?

ரேபீஸ் (Rabies) என்பது ரேபீஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்ற நோய். நாய் கடித்தால் மட்டுமே இந்த நோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை. இந்தக் கிருமிகள் நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வௌவால் போன்ற பாலூட்டிகள் பலவற்றில் வசிக்கும். இவற்றில் ரேபீஸ் கிருமி உள்ள எந்தவொரு பாலூட்டி மனிதரைக் கடித்தாலும் ரேபீஸ் வரும். இந்தியாவில், முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது. அதனால்தான் இதனை ‘வெறிநாய்க்கடி நோய்’ என்கிறோம்.

*நோய் வரும் வழி?

ரேபீஸ் நோயுள்ள நாயின் உமிழ்நீரில் ரேபீஸ் வைரஸ்கள் வாழும். இந்நாய் மனிதரைக் கடிக்கும்போது ஏற்படும் காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்து கொள்ளும். அங்குள்ள தசை இழைகளில் பன்மடங்கு பெருகும். பிறகு, நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, மூளைத் திசுக்களை அழித்து, ரேபீஸ் நோயை உண்டாக்கும். இதுதவிர, சிறிய அளவில் வெறிநாய் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் வெறிநாய் நாவினால் தீண்டினாலும், அதன் உமிழ்நீர் பட்டாலும் இந்த நோய் வரலாம். வெறிநாய் காலில் கடித்தால், பாதிப்புகள் வெளியில் தெரிய அதிக நாட்கள் ஆகலாம். முகத்திலோ, கையிலோ கடித்தால் உடனடியாக அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.

*அறிகுறிகள்?

பொதுவாக, வெறிநாய் கடித்த 5 நாட்களுக்கு மேல் இந்த நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சிலருக்கு அதிகபட்சமாக 90 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் தோன்றக்கூடும். இந்த நோயின் முதல் அறிகுறி
நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுவது. இதைத் தொடர்ந்து, காய்ச்சல், வாந்தி வரும். உணவு சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது. ரேபீஸ் நோய் உள்ளவர்கள் தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள். காரணம், தண்ணீரைக் கண்டதும் தொண்டையில் உள்ள விழுங்கு தசைகள் இறுக்கமடைந்து, சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படுவதால், ‘எங்கே உயிர் போய்விடுமோ’ என்று பயந்து, இவர்கள் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள். இதற்கு ‘ஹைட்ரோபோபியா’ என்று பெயர். இவர்கள் உடலில் அதிக வெளிச்சம் பட்டால் அல்லது முகத்தில் காற்று பட்டால் உடல் நடுங்கும். எந்நேரமும் அமைதியின்றிக் காணப்படுவார்கள். எதையாவது பார்த்து ஓடப்பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்து வதும் கடிக்க வருவதுமாக இருப்பார்கள். நோயின் இறுதிக்கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பார்கள்.

*உயிர் காக்கும் தடுப்பூசி!

நடைமுறையில், வெறிநாய் கடித்தவருக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள் என்று பயந்தே பலரும் சிகிச்சைக்கு வருவதில்லை. அது அந்தக் காலம். இப்போது நவீன தடுப்பூசிகள் வந்துவிட்டன. ஐந்தே ஊசிகளில் ரேபீஸ் நோயை 100 சதவிகிதம் வர விடாமல் தடுத்துவிடலாம். இந்த ஊசிகள் தொப்புளில் போடப்படுவதில்லை. புஜத்திலேயே போட்டுக் கொள்ளலாம். நாய் கடித்த அன்றே இச்சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.

நாய் கடித்த நாள், 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என 5 தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். காயம் கடுமையாக இருந்தால், 6வது ஊசியை 90வது நாளில் போட்டுக் கொள்ளலாம். இதற்கு அதிக செலவாகும் என்று நினைக்க வேண்டாம். இத்தடுப்பூசி எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

*வீட்டு நாய் கடித்துவிட்டால்?

வீட்டு நாய்க்கு முறைப்படி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் கூட, அந்த நாயால் கடிபட்டவர் ரேபீஸ் தடுப்பூசியைப் போடத் தொடங்கிவிட வேண்டும். அதே நேரத்தில் அந்த நாயை 10 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எவ்வித மாறுதலும் தெரியவில்லை என்றால், முதல் மூன்று தடுப்பூசிகளுடன் (0, 3, 7) நிறுத்திக் கொள்ளலாம். நாயிடம் வெறிநாய்க்குரிய மாறுதல்கள் தெரிந்தால், மீதமுள்ள தடுப்பூசிகளையும் (14, 28) போட்டுக்கொள்ள வேண்டும்.

*வெறிநாயின் அடையாளம்?

ரேபீஸ் கிருமிகளால் தாக்கப்பட்ட நாய் காரணமின்றிக் குரைக்கும். அது ஊளையிடுவது போலிருக்கும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். பார்ப்போர் அனைவரையும் துரத்தும். தூண்டுதல் இல்லாமல் கடிக்க வரும். நாக்கு அதிகமாக வெளியே தள்ளி இருக்கும். எந்நேரமும் எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கும். பொதுவாக, ரேபீஸ் வந்த நாய் 10 நாட்களுக்குள் இறந்துவிடும். இதற்கு நேர்மாறாகவும் சில வெறிநாய்கள் இருப்பதுண்டு. வீட்டில் அல்லது தெருவில் ஏதாவது ஒரு மூலையில் தனிமையாக, மிகவும் அமைதியாக இருக்கும். எதுவும் சாப்பிடாமல் இருந்து 10 நாளில் இறந்துபோகும்.

*எச்சரிக்கை தேவை!

சிலருக்கு நாய் கடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அல்லது நாயிடமிருந்து ரேபீஸ் கிருமிகள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். யார் இவர்கள்? இந்தியக் குழந்தைகள்தான் இந்தப் பட்டியலில் முதலில் இடம் பெறுகிறார்கள். காரணம், இந்தியக் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர் துணையின்றித் தெருக்களில் விளையாடுவார்கள். நாய் பிராண்டுதல், நாவினால் தீண்டுதல் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துகளை இவர்கள் அறியமாட்டார்கள். ஆகவே, நாய் பிராண்டியது என்றோ, நாய் தீண்டியது என்றோ பெற்றோரிடம் சொல்லமாட்டார்கள். இவர்களுக்கு ரேபீஸ் வந்த பிறகுதான் நடந்தது தெரியவரும்.

தெருநாய்கள் கட்டுப்பாடின்றி அலையும் தெருக்களில் வசிப்போர் மற்றும் அவ்வாறான ஊர்களுக்கு அடிக்கடி பயணம் செய்வோர், பணிபுரிந்துவிட்டு இரவில் இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்புவோர், கால்நடை மருத்துவர்கள், கால்நடைப் பணியாளர்கள், நாய் வளர்ப்போர், நாய் பிடிப்போர், நாயைப் பழக்குவோர், அஞ்சல் பணியாளர்கள், காவல்துறையினர், ரத்தப் பரிசோதனைக்கூடப் பணியாளர்கள், ரேபீஸ் நோய் ஆராய்ச்சியாளர்கள், ரேபீஸ் நோய்க்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிவோர், ரேபீஸ் நோய்க்குச் சிகிச்சை தரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆரம்பச் சுகாதாரப் பணியாளர்கள், இறந்த விலங்குகளைப் பதப்படுத்துவோர், வன இலாகாவினர், விலங்குகளை வேட்டையாடுவோர், மிருகக்காட்சிசாலையில் பணிபுரிவோர் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நல்லது.

*முன்னெச்சரிக்கை தடுப்பூசி

மேலே கூறப்பட்டவர்கள் ரேபீஸ் தடுப்பூசியின் முதல் ஊசியை ஆரம்ப நாளில் போட்டுக்கொண்டு, 2வது ஊசியை 7வது நாளிலும், 3வது ஊசியை 28வது நாளிலும் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஊக்குவிப்பு ஊசி’யாக (Booster dose ) இத்தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு முன்னெச்சரிக்கையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நாய் கடித்துவிட்டால் இப்படிச் செய்ய வேண்டும்: நாய்க்கடி காயத்தை ஏற்கனவே சொன்னதுபோல் நன்றாகச் சுத்தப்படுத்திவிட்டு, நாய் கடித்த நாளில் ஒரு தடுப்பூசியும், 3வது நாளில் ஒரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.

*வீட்டு நாய்க்கும் தடுப்பூசி!

வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் அதற்கு ரேபீஸ் தடுப்பூசியை கண்டிப்பாகப் போட வேண்டும். நாய்க்குட்டிக்கு 3 மாதம் முடிந்ததும் ஒன்றும், 4 மாதம் முடிந்ததும் ஒன்றும் மொத்தம் 2 தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். அடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை ரேபீஸ் பூஸ்டர் தடுப்பூசியைக் கட்டாயம் போட வேண்டும். தெரு நாய்களுடன் வீட்டு நாய்களைச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு நாய் சோர்வாக இருந்தாலோ, சாப்பிடாமல் இருந்தாலோ, எல்லோரையும் கடித்துக் கொண்டிருந்தாலோ கட்டிப்போட வேண்டும். அந்த நாயைக் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். 10 நாட்களுக்குள் அந்த நாய் இறந்துவிட்டால், ரேபீஸ் நோய்க்கான தடுப்பூசியை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.

*நாய்க்கடிக்கு நவீன சிகிச்சை!

ரேபீஸ் நோயாளியை சில மருந்துகள் மூலம் செயற்கையாக கோமா நிலைக்குக் கொண்டு சென்று, அமான்டடின் எனும் வைரஸ் எதிர்ப்பு மருந்தை ஒரு வாரத்துக்குக் கொடுத்துவந்தால், ரேபீஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலை உடல் பெற்றுவிடுகிறது. இதன் பலனால், நோய் குணமாகிவிடுகிறது. இது எல்லோருக்கும் பலன் தரும் எனக் கூற முடியாது.

உடலுக்குள் புகுந்த ரேபீஸ் கிருமிகள் வீரியம் குறைந்ததாக இருந்தால் அல்லது இவை மூளையைத் தாக்குவதற்கு முன்னால் இந்தச் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால் ரேபீஸ் நோயாளி உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. இதுவரை உலகில் 7 ரேபீஸ் நோயாளிகள் இப்படி உயிர் பிழைத்து வரலாறு படைத்துள்ளனர். உயிர் காக்கும் இந்தச் சிகிச்சைக்கு மில்வாக்கீ புரோட்டக்கால் (Milwaukee protocol) என்று பெயர். தமிழகத்தில் வேலூரிலுள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

தொகுப்பு: சரஸ்

You may also like

Leave a Comment

nineteen − seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi