கவர்னர் தனது வேலையை தவிர மற்ற எல்லாவற்றிலும் தலையை நீட்டுகிறார்; ஊட்டி கவர்னர் மாளிகையில் தனது மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார்: தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

சென்னை: கவர்னர் தனது வேலையை தவிர மற்ற எல்லாவற்றிலும் தலையை நீட்டுகிறார் என்றும், ஊட்டி கவர்னர் மாளிகையில் தனது மகளுக்கு எந்த அடிப்படையில் அவர் திருமணம் நடத்தினார் என்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட வார்டுகளில் சுமார் 104 தெருக்களில், கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக ரூ52.69 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நேற்று அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி அமோக வெற்றி பெறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை பிரதமராக காட்டுகிறாரோ அவர் கண்டிப்பாக நீட் தேர்வை தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவார். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை எல்லாம் ஒரு தலைவரா? மக்கள் பிரச்னைகளை திசை திருப்பும் வகையில் அவர் பேசிக் கொண்டு வருகிறார். தமிழ்நாட்டு கவர்னர் அவரது அதிகாரங்களின் எல்லைகளை மீறுகிறார். கவர்னரை கண்டிக்கின்ற உரிமை அனைவருக்கும் உண்டு. கவர்னரின் வேலை என்பது ஒரு தபால்காரனின் வேலை தான். தேவை இல்லாமல் அவர் மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

கவர்னரின் பொறுப்பு என்பது ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் பொறுப்பாகும். இந்த பொறுப்பை வாங்கிக் கொண்டு பாஜவை எதிர்க்கும் கட்சிகளை சிரமத்துக்கு உள்ளாக்கினால் அடுத்தபடியாக ஒன்றிய அரசு துணை ஜனாதிபதி அல்லது வேறு ஏதேனும் பொறுப்புகளை வழங்கும் என்ற ஆசையில் இதைப் போன்று தேவையற்ற வேலைகளை கவர்னர் ரவி செய்து வருகிறார். கவர்னர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் இருக்கக்கூடிய கவர்னர் மாளிகையில் அவருடைய மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார்? தமிழ்நாடு அரசு பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளிப்பாரா? இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு