காலாண்டு விடுமுறை கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

*களைகட்டிய படகு சவாரி

கன்னியாகுமரி : பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இதனால் படகு சவாரி களைகட்டியது.சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தைவிட ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வரத்தொடங்கியுள்ளனர். விடுமுறை விடுவதற்கு முன்னதாகவே வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளில் முன்பதிவு செய்து விட்டனர்.

இதனால் விடுதிகள், ஓட்டல்களில் அறைகள் விறுவிறுவென நிரம்பி வருகின்றன. நேற்று காலை முதலே கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகளில் ஏறிச்சென்று பார்த்து ரசித்தனர்.

இதற்கு டிக்கெட் வாங்குவதற்காக படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். காந்தி, காமராஜர் மணி மண்டபங்கள், சன்செட் பாயின்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளதால் போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா பாதுகாவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் கடைகளில் விற்பனையும் படுஜோராக இருந்தது. சுற்றுலா பயணிகளை கவருவதற்காக விதவிதமான துணிமணிகள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.

Related posts

கொடைக்கானலில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் காட்டு மாடுகள்

ஆந்திராவில் இடிதாக்கி கணவன், மனைவி பலி

Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு; மழைப்பொழிவு இருந்தால் பிரச்சனையே இருக்காது :ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி