புழல் காவல்நிலையத்தில் உருக்குலைந்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்: ஏலம் விட வலியுறுத்தல்

புழல்: புழல் காவல் நிலையத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பறிமுதல் வாகனங்கள் அனைத்தும் தற்போது பழுதாகி உருக்குலைந்து வீணாகி வருகின்றன. மேலும், அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகின்றன. இவற்றை ஏலத்தில் விடுவதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை புழல் பகுதிகளில் குற்றப்பிரிவு மற்றும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் சார்பில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்பட பல்வேறு வாகனங்கள் நீண்ட காலமாக புழல் காவல்நிலையம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது மழை மற்றும் வெயிலால் துருப்பிடித்து வீணாகி, உருக்குலைந்த நிலையில் உள்ளன.

மேலும், பறிமுதல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பகுதிகளில் புதர்காடுகள் வளர்ந்து, அங்கு பல்வேறு சுற்றுப்புற சுகாதார சீ ர்கேடுகள் நிலவி வருகின்றன. இதுகுறித்து காவல்நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தால், இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அகற்றப்படவில்லை என்கின்றனர். எனவே, இந்த பறிமுதல் வாகனங்கள் தொடர்பான வழக்குகளில் உடனடி தீர்வு காணவும், அங்கு நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 100க்கும் மேற்பட்ட பறிமுதல் வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விடுவதற்கும் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இலங்கை அணி

துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்