புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புழல்: மணலி அருகே புழல் ஏரி உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருமழையின் போது, பூண்டி மற்றும் புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கால்வாய் வடபெரும்பாக்கம், ஆமுல்லைவாயல், சடையங்குப்பம் ஆகிய பகுதி வழியாக முகத்துவார ஆற்றில் இணைந்து கடலில் கலக்கிறது. இந்நிலையில் மணலி மண்டலத்துக்குட்பட்ட ஆமுல்லைவாயல் பகுதியில் இருந்து பர்மா நகர் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு உபரிநீர் வரக்கூடிய நீர்வழி பாதையான கால்வாய் சீரமைக்கப்படாமல் ஆங்காங்கே சேரும், சகதியுமாகி, பூதர் மண்டி கிடக்கிறது. இதனால் பெரும் மழையின்போது இவ்வழியாக பெருக்கெடுத்து வரும் உபரிநீர் சீராக போக முடியாமல் சீரமைக்கப்படாத கால்வாயின் கரை வழியாக வெளியேறி குடியிருப்புகள் புகும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக, கலைஞர் நகர், சிபிசிஎல் நகர், அப்போலோ ஆம்ஸ்ட்ராங் நகர், சின்னசாமி நகர், மணலி புதுநகர், எலந்தனூர், பர்மா நகர், அரியலூர், கொசப்பூர், சடையங்குப்பம் போன்ற பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்றுப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மணலி மண்டலத்துக்குட்பட்ட ஆமுல்லைவாயல் முதல் சடையங்குப்பம் வரை உபரிநீர் கால்வாய் முழுவதும் மணல் திட்டுகள் அடைத்து கிடக்கிறது.

இந்த நீர் வழிப்பாதையில் ஒரு சில தனியார்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அங்கு லாரி ஷெட்டுகளை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளனர். இவ்வாறு அரசின் தரிசு நிலமாக உள்ள இந்த நீர் வழிப்பாதை நிலத்திற்கு வருவாய்த் துறையில் உள்ள சில அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணங்கள் தயாரித்து அதற்கு பட்டா பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நீர்வழி பாதையில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் மணலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மழைநீர் புகுந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி உபரி நீர்வழி பாதையை தூர்வாரி சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்