புழல் மத்திய சிறையில் செயல்படும் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் தகவல்


சென்னை: புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை என்று சிறை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதி பக்ரூதின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேன்டீன் திடீரென கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இந்த கேன்டீனை திறக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.சத்தியநாராயண பிரசாத், வி.லக்‌ஷ்மி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, கேன்டீன் மூடப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கேன்டீனை மீண்டும் திறக்கக்கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கேன்டீனை திறக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றார். சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக், கேன்டீன் மூடப்படவில்லை. இருப்பினும் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்கிறோம் என்று தெரிவித்தார். இதையடுத்து, கேன்டீனின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு