புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது

சென்னை: சென்னையில் இருந்து ₹40 கோடி மதிப்புள்ள 4.17 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் ₹1.5 கோடி பணம் இலங்கைக்கு கடத்த முயன்ற வழக்கில் இலங்கையை சேர்ந்த 3 பேர் உள்பட 9 பேரை ஒன்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு மெத்தம்பெட்டமைன் கடத்த முயன்ற வழக்கில் ஒன்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 11ம் தேதி இளம் குற்றவாளி உள்பட இலங்கையை சேர்ந்த 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய மண்டபம் அகதிகள் முகாமுக்குள் இருந்த இலங்கை அகதி ஒருவர் மற்றும் சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமாரி, முகமது ரிசாலுதீன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.47 கிலோ மெத்தாம் பெட்டமைன் மற்றும் அமெரிக்க டாலர், இலங்கை பணம் என இந்திய ரூபாய் மதிப்பில் ₹1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதில், சென்னையில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமாரியிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கடந்த 2021ம் ஆண்டு அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ள ஹவாலா பணம் மோசடி மன்னன் காசிலிங்கம் என்பவரின் மனைவி என தெரியவந்தது. காசிலிங்கம் புழல் சிறையில் இருந்து தனது மனைவி கிருஷ்ணகுமாரி மூலம் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தி சென்னை வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் புழல் சிறையில் உள்ள ஹவாலா மோசடி மன்னன் காசிலிங்கத்தை கடந்த 25ம் தேதி கைது செய்தனர்.

மேலும், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே நடந்த வாகன சோதனையில் மணிப்பூரில் இருந்து 2.7 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து 3 மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்களை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.7 கிலோ மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் சென்னையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்த முயன்றதாக இலங்கையை சேர்ந்த 3 பேர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ₹40 கோடி மதிப்புள்ள 4.17 கிலோ மெத்தாம் பெட்டமைன் மற்றும் ₹1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்