மிக்ஜாம் புயல், மழையால் புட்லூர் தடுப்பணை நிரம்பியது: பொதுமக்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனர்


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள புட்லூர் தடுப்பணை நிரம்பி வழிந்ததால், துள்ளி வரும் மீன்களை வலைவிரித்து பொதுமக்கள் ஆர்வத்துடன் அள்ளிச் சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மிக்ஜாம் புயலால் கடந்த 2 நாட்களாக விடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, திருவள்ளூர் அடுத்த புட்லூர் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள தடுப்பணையில் வெள்ளப்பெருக்கால் நிரம்பி வழிந்தது. இதேபோல், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது இந்த தடுப்பணை நிரம்பியது. இது, நிரம்புவதன் மூலம் புட்லூர், அரண்வாயல், அரண்வாயல்குப்பம், வெங்கத்தூர், மணவாளநகர் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாய கிணறுகள் மற்றும் கிராமங்களில் உள்ள குடிநீர் ஆழ்துளை கிணறுகளுக்கும் போதுமான நீர் ஆதாரமாக இருக்கும்.

மேலும், இந்த மழையால் புட்லூர் தடுப்பணை நிரம்பியதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர். அதோடு, தடுப்பணையில் பாய்ந்து வரும் நீரில் மீன்களும் துள்ளி குதித்தன. அதனால் அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிக்க வலைகளை விரித்தனர். அதில் அதிகளவில் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் குறைந்தது அரை கிலோ முதல் 2 கிலோ வரையில் எடையுள்ள மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். இதேபோல், திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் பகுதியில் உள்ள காக்களூர் ஏரி நிரம்பியதால் அதிலும் மீன்கள் அதிகளவில் துள்ளி குதித்து வந்தன. அதையும் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் பிடித்துச் சென்றனர்.

Related posts

அம்பானி வீட்டு திருமணத்தால் ஊழியர்களுக்கு Work From Home வழங்கிய IT நிறுவனங்கள்..!!

சீமான் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்.. சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேச்சு உள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!!

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு